புத்தன்

மனுசன் தன்னோட வாழ்நாளவே எந்த ஒரு விசயத்துக்கு எதிர்த்து நின்னு போராடினானோ, கடைசியா அவனை மண்ணுல புதைச்சு, அவன் மேலயே ஏறி நின்னு, அவன் எதிர்த்த விசயத்துக்கு விளம்பர அடையாளமா அவனையே மாத்தி அங்கங்க சிலையா நிக்கவச்சது எல்லாம் நம்ப முடியாத வரலாற்று உண்மை.

அதுலயும் கடவுள்களே இல்லை, கடவுள்களே வேண்டாம்னு சொன்னவனை கடைசியா நீயே விஷ்ணுவோட ஒரு பிறப்பு தாண்டான்னு சொல்லி அவனையும் ஒரு கடவுளா உருவாக்கி, ஏற்கனவே இருந்த கடவுளர்களின் பெரிய வரிசையில இவனையும் கடைசியா போய் நில்லுன்னு அவனை நிக்கவச்சிருக்குறதை எல்லாம் என்னன்னு சொல்லிட முடியும்.

அன்பு அப்படிங்குற ஒற்றை அடையாளமா மட்டுமே மாத்தி, அவனைச் சுத்தி காலங்காலமா கதையச் சொல்லி, அந்தக் கதையெல்லாம் இப்போ வரலாறாகவும், உண்மையாகவும் நாம நம்புற அளவுக்கு வளர்ந்து நிக்குது.

அவன் காலத்துல அந்நியன் அளவுக்கு சமூகத்தின் மேல கோபப்பட்டு வாழ்ந்தவனை, இப்போ அம்பி ரேஞ்சுக்கு அவனை மாத்திவிட்டு wallpaperஆவும், photo frameஆவும் வச்சு டீல் பண்ணிக்கிட்டு இருக்கோம்ங்குற நினைச்சுப்பார்த்தா சிரிக்கிறதா, அழுகுறதான்னு தெரியாத ஒரு மனநிலை தான் மிஞ்சுது. நமக்கு தெரிஞ்ச புத்தனை மாதிரி நின்னு சிரிச்சுட்டே போகவேண்டியது தான்.

சொல்ல மறந்துட்டேன், என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்ன புத்தனைப் பத்தி புதுப் பொழம்பலா இருக்குன்னு கேட்டீங்கன்னா இன்னைக்கு ஏதோ புத்த பூர்ணிமாவாம்.

– ரகு
மே 7, 2020

கடல் யாருக்குச் சொந்தம்?

இன்றைய காலை வேளையில், திருவான்மியூர் கடற்கரையில் இந்தப் படத்தில் நடுவே நிற்கும் பெரியவரைக் காண நேர்ந்தது.

SAVE_20200216_180511

அந்தப் பகுதியில் இருந்த மொத்தக் காக்கைகளும், நாய்களும் ஒரு சேர குழுமியிருந்ததைக் கண்டு, கடற்கரையின் மையத்திலிருந்த நான் இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். கூட்டமான காக்கைகளுக்கும், நாய்களுக்கும் நடுவே அறுபது வயதை ஒட்டிய பெரியவர் ஒருவர் தீனிகளை தன் கைப்பையிலிருந்து எடுத்து அங்கிருந்த காக்கைகளுக்கும், நாய்களுக்கும் மும்முரமாக வீசியபடி நின்றிருந்தார்.

சிறிது நேரத்தில் அவர் பையிலிருந்த அத்தனை தீனிகளையும் எடுத்து அவைகளுக்கு காலை உணவாக்கிவிட்டு, கொண்டுவந்த பாலிதீன் பைகளை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசினார். வந்த வேலை முடிந்ததென்ற நிறைவில் வட்டமிட்டு நின்ற காக்கைகளையும், நாய்களையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு விருவிருவென கடற்கரையை விட்டு சாலையை நோக்கிச் சென்றபடி இருந்தார்.

அங்கு அவரைக் கவனித்ததில், அவர் கடலுக்கு வேடிக்கை பார்ப்பவராக வந்திருக்கவில்லை எனத் தோன்றியது. எப்படி ஒரு குறுநில விவசாயி காலை எழுந்ததும் தனது தோட்டத்தில் இருக்கும் ஆடு மாடுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் தோட்டத்தைச் சுற்றி ஒரு வட்டமிட்டுச் செல்வானோ அப்படியே இருந்தது இந்தப் பெரியவரின் நடை, பாவனை எல்லாம். இப்பெரும் கடலின் உரிமையாளர் போல, காலையில் எழுந்ததும் அவசர அவசரமாக வந்து, ஒரு பெரும் பையில் தீனிகளை அங்கிருந்த கரை வாழ் உயிரினங்களுக்கு உரிமையாகப் பசியாற்றிவிட்டுச் சென்றிருந்தார் அந்தப் பெரியவர்.

பருவ காலத்து பேரழகியை விடவும் பேரழகாயிருந்தது அந்நேர சூரியோதயக் கடல். ஆனால், அதைக் கடைக்கண் கொண்டும் கவனித்தவராக அந்தப் பெரியவர் அப்போது இல்லை. கடல் நோக்கி அவர் சிறிதும் கவனிக்காது சென்றதைப் பார்த்தால், கடல் தன் சுய அழகின் மீது பெரும் சந்தேகம் கொண்டு சூரியக் கண்ணாடி பார்த்து தன் அழகை மீண்டும் சரி செய்திருக்கத்தான் வேண்டும். ஏனென்றால் அந்தக் காலை நேரத்தில் உலகில் இருந்த அத்தனை அழகியல்களை விடவும் அழகாக இருந்தது கடல். எந்தக் கேமிராவும், எந்தச் சொற்களும் அந்நேர முழுஅழகையும் பதிந்து வைக்கமுடியாத ஓரழகாக இருந்தது அது.

எந்நாளும், எழும்போதே கூடவரும் அழகெல்லாம் கடலுக்கு மட்டுமே வாய்த்ததாக இருக்க வேண்டும். எக்காலத்திலும் அது மனிதனுக்கெல்லாம் வரப்போவதில்லை.

வழியில் எதிர்வந்த பேரழகின் நேரெதிர் கண் பார்வையைத் தன் சுயநினைவுடன் புத்தன் எதிர்கொண்டவனாயிருந்தால் தன்நிலை தடுமாறி அவன் மனைக்கே திரும்பத் திருந்தி போயிருந்திருப்பான். அப்படியான கடலோடு சூரியன் எழும் ஓர் தருணத்தின் அழகிய தடுமாற்றத்தைத் துறந்த புத்தனாகக் கரையேறிக் கொண்டிருந்தார், நான் பெயரறியாத அந்தப் பெரியவர். அரண்மனை துறந்த புத்தனாக அவர் கடல் துறந்து சென்றபடி இருந்தார்.

IMG_20200216_063856

இதற்கிடையில், அந்தப் பெரியவர் கடற்கரையை விட்டு நெடுந்தூரம் சென்றிருந்தார். அவர் கூடவே, சிறிது தூரத்திற்கு காக்கைகளும், நாய்களும் சென்று பின்னர் கலைந்து சென்றன. வெகு இயல்பாக அந்தக் கடலும், கடற்கரையையும் தனக்கு சொந்தமென சொல்லாமல் சொல்லியபடிச் சென்றிருக்கிறார் அவர். அந்நேரத்தில் சென்னைக்குப் புதிதாக வந்த யாரேனும் இந்தக் கடல் யாருக்குச் சொந்தமானது எனக் கேட்டிருந்தால், திருவான்மியூரின் எல்லைக்குள் வரும் கடலும், கரையும் அவருக்குச் சொந்தமானது என்றிருப்பேன் நான்.

என்னைப் போல, எங்களைப் போல எத்தனையோ பேர் கடல் பார்க்க கரை ஒதுங்கியபடி இருந்தோம். எங்களின் வருகையை இக்கடல் எதிர்பார்த்திருக்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்தப் பெரியவரின் வருகையை இப்பெரும் கடல் எதிர்பார்த்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

கரை தொட்ட அலையைப் போல, கடல் தொட்ட அன்பாக அவர் அங்கு வந்து சென்றிந்தார். வங்கக் கடல் அவரின் அன்பின் ஆழிப்பேரலைக்காகக் காத்திருக்கும். இப்படியான மாமனிதர்களின் சுவடுகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது கடற்கரை. மனதில் ஒட்டிய கடற்கரை மணலை உதறாமல் திரும்ப வீடு வந்திருக்கிறேன் நான்.

 

நாள்: 16-02-2020

IT life – உள்ளே, வெளியே. எது நிஜம்?

IT வாழ்க்கையைப் பத்தி இங்க நிறைய பேருக்கு நிறைய நிறைய கருத்துகளும், கனவுகளும், ஏன் வெறுப்பு கூட இருக்குது.
பொதுவாக அரசு வேலை அதிகாரிகள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், வெளிநாட்டு வேலை வாழ் மக்கள் இவங்க மேலயும், இவங்களோட வேலை மேலயும் ஒரு ஈர்ப்பு கலந்த வெறுப்பு இருந்துட்டு இருக்கும். இந்த லிஸ்ட்ல கடந்த சில வருசத்துல புது எண்ட்ரி ஆகியிருக்கிறது “IT மக்களும், அவர்களின் வளமான வாழ்வும்“. ஊர்ல இருக்குறவங்க எல்லாரும் ஐடி சொகுசானா வாழ்க்கைங்குறாங்க, ஆனா ஐடில இருக்குறவங்க பெரும்பாலும் அப்படி சொல்றது இல்லை. அப்படின்னா யாரு சொல்றது தான் உண்மை, யார் பொய் சொல்றாங்கன்னு பார்ப்போம்.

இதுவரை நிறைய தமிழ் திரைப்படங்கள் IT மக்களோட வாழ்க்கையப் பத்தின கட்டுக்கதைகளோட வந்திருக்கு, ஆனா இதுல ஒரு படமாவது உண்மைச் சம்பவமா இருக்குறத சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தா மொத்த படத்துல ஒரு சம்பவமாவது உண்மையான ITய பத்தி காட்டுங்கடான்னு கடைசியில புலம்ப வச்சிடுறாங்க. அதை மீறி அப்படியே ஆன்லைன் பக்கம் போனாலும் IT வாழ்வியல் பத்தின அனுபவக்கட்டுரைகள் மிக மிகச் சொற்பமாகத் தான் இருக்கு, குறிப்பா தமிழ் மொழியில். சரி, ITல இருந்து Code எழுதுறத விட்டு, ITய பற்றியும் கொஞ்சம் எழுதுவோமேன்னு ஆரம்பிச்சது தான் இந்தப் பதிவோட காரணம். வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்னு எவனோ சொல்லிட்டுப் போனத ஒருகாலத்துல நம்பின இந்தச் சமூகம் தான் இப்போ ITல வேலை பாக்குற மக்களைப்பத்தி தப்பான சில estimations வச்சிருக்கு. அதுல ஒரு சில estimations பார்ப்போம்.

1) படத்துல பாக்குற மாதிரி ஐடில மக்கள், office environment எல்லாம் இருக்கும்.

Reality: வாய்ப்பில்ல ராசா! வாய்ப்பே இல்லைங்குற மாதிரி தான் ரியலிட்டி நம்மள லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணீட்டுப் போகும்.

2) ஐடில இருக்க எல்லாருக்கும் coding பண்ணத் தெரியும்.

Reality: கோடிங் பண்ணத் தெரியுமான்னு கேட்டுத்தான் இண்டர்வியூல செலக்ட் பண்ணுவாங்க, அதுக்காக வேலைக்கு வந்துட்டு கோடிங் பண்ற வேலை மட்டும் தான் வேணும்னு அடம்பிடிச்சா, அப்புறம் பாதிக்கும்மேல எல்லாரும் வேலை இல்லாம தான் இருக்கனும்.

3) ஐடில இருக்கவங்க இலட்ச இலட்சமா சம்பாதிப்பாங்க.

Reality: உண்மைதான், ஆனா அந்த இலட்சமெல்லாம் மாத சம்பளமா இருக்குமோன்னு சந்தேகமே வேண்டாம், அது வருட சம்பளமாகக் கூட இருக்கலாம்.

4) Coding பண்றது easy, நான் கூட ஸ்கூல்ல கோடிங் பண்ணிருந்தேன்.

Reality: coding பண்றது easy தான். ஆனா bug fixing அப்படியில்ல. நல்லா யோசிச்சுப் பாருங்க ஸ்கூல்ல நீங்க கோடிங் பண்ணிருப்பீங்க, ஆனா bug fixing பண்ணிருக்கீங்களான்னு.

சில மென் நேரங்களில், சில வன்தருணங்களில் இரக்கமற்ற bugsகளை களையெடுத்தே(fixing) ஆக வேண்டியிருக்கும் இந்த இலக்கற்ற பயணத்தில்.

சரி, முன்னுரைய முடிவுக்கு கொண்டுவந்துட்டு முக்கிய கட்டத்துக்கு சீக்கிரம் வருவோம்…

Disclaimer: இந்தப் பதிவு IT மக்களுக்கு அனுதாபத்தைத் தேடித்தரவோ, அவங்களப் பத்தி பரிதாபப்படவோ எழுதினது இல்லை. பொதுவா ITல இருக்க நிறைய மக்களுக்கும் IT பத்தின புரிதல் அவ்வளவாக இல்லைங்குறது தான் உண்மை. அதுதான் இந்தப் பதிவுக்கு காரணமும் கூட.

பொதிகை சேனல்ல ஒரு காலத்துல பொழுதுபோன மாலை 6 மணிக்கு வயலும் வாழ்வும் னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புவாங்க. அந்த நிகழ்ச்சியெல்லாம் பார்த்து எப்படி விவசாயம் பண்ணனும்னு கத்துக்காத ஆளுக நாமதான், ஏதோ ரெண்டு மூனு படத்துல,எங்கேயோ ரெண்டு மூனு பேர் சொல்றதக் கேட்டு IT பத்தின நம்மளோட கற்பனைக் குதிரைய ஓட விட்டிடுறோம்.

சரி, ITல இருக்க எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளும், வருமானங்களும் இன்னபிற வசதிகளும் கிடைச்சிடுதான்னு பார்த்தா, கண்டீப்பாக இல்லை. எல்லோரும் ஈசியா புரிஞ்சுக்குற மாதிரி சொல்லனும்னா, இட ஒதுக்கீடு இல்லாத ஊர்ல மெரிட் மட்டுமே கன்சிடர் பண்ற சங்கர் பட திரைக்கதை மாதிரி தான் ஐடில நடக்கும். இதையெல்லாம் தாண்டி, மொத்த ஐடி உலகத்தையும் ஜஸ்ட் லைக் தட் ஈசியா ஒரு ரெண்டு வரி டெஃபனீசன்ல சொல்லிட முடியாது, அப்படி ஈசியா சொல்லிடவும் விடமாட்டோம்.

இருக்குற மொத்த ஐடி நிறுவனங்களை நம்ம புரிதலுக்காக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அதுல முதல் வகை ஸ்டார்டப்(Startup) நிறுவனங்கள். இரண்டாவது வகை MNC நிறுவனங்கள். இந்த Startup நிறுவனங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு Unique and Interesting ஐடியால வேலை பார்த்துட்டு இருப்பாங்க. Start-up ஸ்டேஜ்ல இருக்குற கம்பெனியில வேலை பாக்குறவங்க கொஞ்ச பேர்தான் இருப்பாங்க. இவ்வளவு ஏன் ஒருத்தர், ரெண்டு, மூணு பேர்னு மட்டும் வேலை பாக்குற சில கம்பெனிகள் இருக்கு. அதே மாதிரி நூறு பேரு கூட வேலை பாக்குற Start-up companies’ம் நிறைய இருக்கு.

இந்த Startup companies இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1) Product based Startup companies. 2) Service based Startup companies.

Product based Startup companies:
இதுக்கு உதாரணமாக Swiggy, Paytm, Zomatoல ஆரம்பிச்சு நம்ம ஊர்ல இருந்து உருவான Zoho, Freshworks மாதிரி நிறைய நிறுவனங்களை சொல்லலாம். இந்த மாதிரி Product based Startupsல வேலை கிடைக்கிறது கடினம், அதைவிடக் கடினம் அங்க இன்டர்வியூக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறதும் கூட.

இந்த மாதிரி நிறுவனத்துல வேலை பாக்குற ஒருத்தனுக்கு அவனோட ஒவ்வொரு நாள்லயும் செஞ்சு முடிக்க நிறைய வேலை இருக்கும். கொஞ்ச பேரு நிறைய வேலைகளை செய்யுற மாதிரி இருக்கும். உதாரணமா ரெண்டு பேர், ஒருத்தர்னு மட்டும் கூட ஒரு டீம்ல இருப்பாங்க. ஆனா இங்க சம்பளம் நிறைய வாங்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதுவே Funded நிறுவனமா இருக்குறப்போ சம்பளம் மற்றும் இன்னபிற வசதிகளும் நினைச்சுப் பாக்க முடியாத அளவு அதிகமாக இந்த மாதிரி நிறுவனங்கள்ல எப்பவும் நமக்கு கத்துக்குறதுக்கு நிறைய இருக்கும். இங்க வேலை பாக்குறவங்களோட நேரத்தை சேமிக்கிறதுக்கான வசதிகள் அதிகமா இருக்கும். வேணும்னா அங்கேயே தூங்கி எந்திருச்சு, குளிச்சு மறுபடியும் வேலைய ஆரம்பிக்கிற மாதிரி கூட வசதிகள் இருக்கும். ஆனா இதுல ஒரு விஷயம் என்னன்னா, இங்க வேலை கிடைக்கிறதுக்கான வாய்ப்பும், அதற்கான திறமையும் வெகு சிலருக்குத்தான் இருக்கு. இங்க வேலை பாக்குற நிறைய பேருக்கு Friday night party, weekend outing போக பெரும்பாலும் நேரம் இருக்காது, அல்லது அவங்களுக்கு ஆர்வமும் இருக்காது. இங்க வேலை பாக்குறத ஒரு வரில சொல்லனும்னா High Risk, High Return எனச் சொல்லலாம். இதுல Risk என்னன்னா, Startup companies நீடிச்சு இருக்க எந்த உறுதியும் இருக்காது, Job security is low. எப்போ வேணாலும் கடைய சாத்திட்டு போகுற மாதிரியே தான் ஆரம்பத்துல கம்பெனி போகும். 100 Startup companies ல மூணு வருசத்தக் கடந்து வளர்ற companies மூணு அல்லது நாலுனு தான் இருக்கும். Workaholicஆ இருக்குறவங்களுக்கு இந்த மாதிரி கம்பெனில வேலை பார்க்க புடிக்கும்.

Service based Startup companies:
இதுக்கெல்லாம் நேரெதிரா இன்னொரு கூட்டம் இருக்கு. அவங்க எல்லாம் Service based Startupல வேலை பாக்குறவங்க. இதை உங்க சொந்த ஊர்ல இருக்க ஒரு web development கம்பெனியா நினைச்சுக்குங்க. பொதுவாக சொல்லனும்னா இருக்கறதுலயே effort அதிகமாகக் கொடுத்தும், அதற்கான value கிடைக்காத ஐடி ஏரியா இதுவாகத் தான் இருக்கும். ஓரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பாக்கிறது எல்லாம் இங்க சகஜம். ஆனா இந்த மாதிரி கம்பெனிகள்ல வேலைபாக்க வாய்ப்பு கிடைக்கலைனா இப்போ மெட்ரோ சிட்டில வேலைபாக்குற நிறைய பேருக்கு ஐடில வாய்ப்பு கிடைக்காமயே போயிருக்கும். ஆரம்பத்துல இங்க கத்துக்க நிறைய இருக்கும் ஆன ஒரு வருசம், ரெண்டு வருசம்னு இங்க வேலை பாத்துட்டு அடுத்த கட்ட கம்பெனிகளுக்கு நாம நகர்ந்து போறது நல்லதா இருக்கும். எல்லோரும் ஈசியா கடந்து போன(கண்டுக்காம போன) வாழ்வுதான் இவர்களுது. இந்த மாதிரி கம்பெனிகள்ல வேலைக்கு பொதுவாக Tier 1 நகர கல்லூரியில் படிச்ச பசங்க போயிருக்க மாட்டாங்க. மத்த எங்கயும் வாய்ப்பு கிடைக்காதவங்க இங்க போயிருப்பாங்க. கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லனும்னா இந்த மாதிரி கம்பெனில வேலை செய்யுறவங்க அனுபவத்தைக் கேட்டு ஐடி வாழ்வியலை அடிப்படையா வச்ச அங்காடித் தெரு படம் மாதிரி எடுக்கலாம். தனக்கான ஒரு வாய்ப்பு எப்படியாவது கிடைச்சுடாதா?, இப்போ இங்க நல்லா கத்துகிட்டு அடுத்த வருசம் சென்னைலயோ, பெங்களூர்லயோ போய் நல்ல கம்பெனில செட்டில் ஆயிடலாம்னு ஒவ்வொரு நாளும் தூங்க போறதுக்கு முன்னாடி நினைக்குற மனசு நிறையவே இருக்கும்.

இந்த மாதிரி கம்பெனில வேலை பாக்குறவங்களுக்கு ஆரம்ப அனுபவ வருசத்துல 5,000 மாத சம்பளம் கூட இருக்கும். இன்னும் சில நேரம் முதல் ஆறு மாதம் சம்பளமே இல்லாம கூட இருக்கும். ஆனா இதுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, நமக்கு டெக்னிக்கலா எதுவுமே தெரியலைனா மட்டும் இப்படி நடக்க வாய்ப்புண்டு.

சரி, அடுத்து ஆடம்பர ஐடி கம்பெனிகளையும், ஐடி மக்களையும் பார்ப்போம்.

இங்கயும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
Product based (Established/MNC) company and Service based (Established/MNC) company.

இதுல Service based MNC கம்பெனிய பத்தி முதல்ல பார்க்கலாம். நம்ம நாட்டுல இருக்குற, நம்ம நாட்டுல இருந்து உருவான அதிபெரும்பாலான கம்பெனிகள் எல்லாம் இந்த வகை Service based companies தான். இந்த மாதிரியான கம்பெனிகளுக்கு தேவையானது (Computer) Engineering, MCA, Msc, Bsc, BCA படிச்ச அதிக எண்ணிக்கையிலான மக்கள். குறிப்பா குறைந்த சம்பளத்துல அதிக மக்கள் வேணும்ங்குறதால Freshers நிறைய பேர எப்பவும் hire பண்ணுவாங்க.

நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச வகையில சொல்லனும்னா “யாரடி நீ மோகினி” படத்துல காட்டின ஐடி கம்பெனி இந்த Service based company தான். யாரடி நீ மோகினி படத்துல வர்ற தனுஷ் மாதிரி ஒரே நைட்ல உக்காந்து coding போட்டு ஒரு ப்ரொஜெக்ட்டை யாரும் வந்து தூக்கி நிறுத்திட முடியாது. இன்னைக்கு வரைக்கும் அந்தப் படத்துல ஏன் தனுஷ் விடிய விடிய coding போட்டு, விடிஞ்சதும் வர்ற teammatesக்கு எதுக்கு அந்த coding’அ print பண்ணி குடுத்தாருன்னு புரியவே இல்லை. நம்ம ஊரோட முக்கால்வாசி ஐடி மக்கள் வேலை செய்யுறது இந்த மாதிரி கம்பெனியில தான். இதுக்கு சில கம்பெனிகள உதாரணமாக சொல்லலாம் Wipro, TCS, CTS, Infosys etc. இந்த கம்பெனில hiring நிறைய இருக்கும், சில நேரத்துல வேலைய விட்டு வீட்டுக்கு அனுப்புறதும் (firing) நிறைய இருக்கும்.

இந்த Service based companyல வேலை செய்யுறவங்களுக்கு ITல இருக்குற ஆவரேஜ் சம்பளம் கிடைக்கும். உதாரணத்துக்கு முதல் வருசம் 3-4 லட்சம் வருட சம்பளமாக கிடைக்கும். அவங்க அடுத்த கம்பெனி மாறும் போது கடைசி சம்பளத்துல இருந்து 30% அதிகமாக கிடைக்கும். சில நேரம் நாம நல்ல திறமையா இருந்து, நம்ம ஸ்கில்க்கு நல்ல டிமாண்ட் இருந்தா 30% விட அதிகமாக கிடைக்கும். இதுல வாய்ப்பு கிடைக்கிற நூத்துல ஒருத்தர் வெளிநாட்டுக்கு போய் அவங்க கம்பெனி சார்பாக வேலை செய்யலாம். சில வருடங்களுக்கு முன்பு வரை அமெரிக்கன் ட்ரீம்ஸ்ஆக இருந்தது இப்போ கனடியன் ட்ரீம்ஸ் என வாய்ப்புகளைப் பொருத்து மாறி வருது.

இந்த மாதிரி கம்பெனில வேலை செய்யுறதால நாம இழக்க வேண்டியதெல்லாம் என்னன்னா?
Work satisfaction பெரும்பாலும் கிடைக்காது. இங்க வேலை பாக்குறவங்க நல்ல creativeவா இருந்தாலும் அவங்களோட திறமையைப் பயன்படுத்துற வாய்ப்பு அந்தக் கம்பெனிகளுக்கு கிடைக்காது. இங்க வேலை பாக்குறது 9-5 job மாதிரி சில பேருக்கு கிடைச்சாலும், பாதி பேருக்கும் மேல இந்த வாய்ப்பு கிடைக்காது.

இந்த கம்பெனில வேலை செய்யுறது இன்னொரு வகையான மக்கள் இருக்காங்க. ITES னு அவங்கள சொல்லுவாங்க. மொத்த ஐடில இவங்க மட்டும் தனித்தீவுல இருக்குற மாதிரி இவங்களோட Day to day இருக்கும். சில வருசங்களுக்கு முன்னாடி ITESல வேலை பாக்குற என்னோட நண்பர்கள் கூட ஒரே ரூம்ல தங்கி இருந்தப்போ, அவங்களை 10 நாளைக்கு ஒருமுறை பாத்து பேசிக்கிற மாதிரி இருந்துச்சு. நான் காலைல கிளம்பி போகுறப்போ அவன் நைட் 4 மணிக்கு வந்து தூங்கிக்கிட்டு இருப்பான், நான் திரும்பி 9 மணிக்கு ரூம்க்கு வர்றப்போ அவன் நைட் 8 மணிக்கு ஆஃபிஸ் கிளம்பி போயிருப்பான். இவங்களுக்கு இன்னபிற நடைமுறைச் சிக்கல்கள் அன்றாட வாழ்வியல் முறையில் இருக்கும். இதையெல்லாம் இவங்களைப் பார்த்து பரிதாபப்படனும்ங்குறதுக்காக சொல்லாம, இப்படியும் ஒரு கூட்டம் உள்ள சுத்திகிட்டு இருக்குங்கிறதுக்காக சொல்லலாம்.

இவ்ளோ பேசிட்டோம், இது வரைக்கும் பல லட்சத்தை மாசத்துல சம்பாதிக்கிற ஆளுகளையும், சாப்பாடும் கொடுத்து, விளையாட இடமும் கொடுத்து, கூட விளையாட ஆளுகளையும் கொடுத்து, விளையாட்டுச் சாமானமும் கொடுத்து, தூங்குறதுக்கு ஆஃபிஸ்லயே இடமும், நேரமும் கொடுத்து, கூடவே வேலையும் அதிக சம்பளமும் கொடுக்குறதா நீங்க கேள்விப்பட்ட ஐடி மக்கள் அதிகப்படியா வாழ்ற இடம் தான் Product based companies. இந்த மாதிரி கம்பெனில மேல சொன்ன வசதிகளை விடவும் இன்னும் நிறைய வசதிகளை அவங்களோட கம்பெனி வேலையாட்களுக்கு பண்ணிக்கொடுப்பாங்க. காரணம் இல்லாம இங்க யாரும் செல்லாத காலணாவ கூட செலவு பண்ண மாட்டாங்க. ஆனா, இவன் ஏன் இப்படி காச காத்தா செலவு பண்றான்னு கேட்டா? மாச சம்பளம் அதிகமாக கொடுக்கிறது ஒரு லிமிட் வரைக்கும் மட்டும் தான் வேலையாட்களை திருப்திபடுத்தும், அதுக்கு அப்புறம் ஆஃபிஸ்ல இருக்க வசதிகள், அங்க இருக்க கலாச்சாரம் என புதுசு புதுசா மனசு தேட ஆரம்பிச்சுடும். இந்த product companies ல வேலைக்கு ஆள் எடுக்குற எண்ணிக்கை கொஞ்சமாகத் தான் இருக்கும். உதாரணமாக, நம்ம ஊர் காலேஜ்ல Wipro, TCS, CTS, Infy கம்பெனிஸ் campus interviewல 100, 200, 300 பேர்னு வேலைக்கு ஆள் எடுக்கும் போது, இவன் மட்டும் 2 பேர் இல்லைனா 3 பேர்னு மேக்சிமம் எடுப்பான். இந்த மாதிரி கம்பெனிலயும் வேலை செய்யுற எல்லாரும் இப்படி சம்பாதிப்பாங்களான்னு கேட்டா இல்லவே இல்லை. ஆனா Service based கம்பெனில இருக்குறவங்கல விட சம்பளம் பெட்டரா இருக்க வாய்ப்பிருக்கு.

சரி, ஏன் Product based companyல இருக்கவங்களுக்கு மட்டும் எதுக்கு இவ்ளோ சம்பளம் னு கேட்டா? அங்க இருக்க ஒவ்வொருத்தர வச்சு மட்டுமே அந்த கம்பெனி மிகப்பெரிய பணத்தை சம்பாதிச்சிருக்கும். இங்க கம்பெனிக்கு வருமானம் அதிகமாவும், வேலை ஆட்கள் கொஞ்சமாவும் இருப்பாங்க. அதுனால இவங்க சம்பளம் அதிகமாக இருக்கும். இதை இன்னும் தெரிஞ்சுக்க “Tech companies earning per employees ” னு Google பண்ணுங்க. கூடவே Perks of joining Google, Perks of joining Apple, Perks of joining Netflix, Perks of joining Microsoftனு தேடிப் பாருங்க. இதெல்லாம் employee benefitsக்கு பண்றேன்னு சொன்னாலும் அதுல ஒரு மார்க்கெட்டிங், ப்ராண்டிங் எல்லாம் இருக்கும். அப்படி இல்லாமலா நாம இங்க Apple, Amazon, Google, Netflixனு பேசிடப் போறோம்.

இவ்வளவு வசதிகளைக் கொடுக்குறப்போ அதுல வேலை செய்யுறவன் எவன் அடுத்த கம்பெனிக்கு போகப் போறான்னு கேட்டா, ஏகப்பட்ட பேர் போவாங்க. பொதுவாக ஒரு IT கம்பெனில ஒருத்தன் இருக்குற ஆவரேஜ் வருசம் மூணு வருசம் மட்டும் தான். இவ்வளவு இருந்தும் ஏன் இவங்க இருக்குறத விட்டுட்டு அடுத்த ஒன்னுக்கு போறாங்கன்னா, பொதுவான காரணம்னு ஏதும் இல்லாம ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணமா போவாங்க. ஐடிய பொருத்த வரைக்கும் ஒரு கம்பெனில வேலைல இருந்துட்டு அடுத்த கம்பெனில எப்பவுமே வேலை தேடுற ஆளுகளைக் கூட பார்க்க முடியும்.

இதுவரைக்கும் நீங்க பார்த்த ஐடி மக்கள் இதுல எந்த categoryல வர்றாங்கன்னு அவங்களுக்கு தான் தெரியும், ஆனா வெளிய இருந்து பாக்குறப்போ எல்லாருக்கும் இந்த வசதி கிடைக்குற மாதிரி தெரியுது. இதையெல்லாம் தாண்டி ஒரு பேருண்மையச் சொல்லனும்னா, இவ்ளோ வசதி ITல இருக்கும், வேலைபாக்குறப்போ சாப்பிட எல்லாமே கொடுப்பாங்க, தூங்க விடுவாங்க, விளையாட விடுவாங்க, இதெல்லாம் தாண்டிய மத்த நிறைய வசதிகள் எல்லாம் கண்டிப்பாக இருக்கும்னு நினைச்சு எல்லாம் ஐடிக்கு பெரும்பாலும் இவங்க வர்றது இல்லை. படிப்பும், படிப்புக்கு ஏத்த வேலையும் இருந்தா போதும்னு வந்த முதல் பட்டதாரிகள் தான் ITல அதிகம். இங்க வந்ததுக்கு அப்புறம் தான் இங்க இருக்க வசதிகள் தெரிய வரும். சரி, வர்றத வேணாம்னா சொல்ல முடியும்னு பெருந்தன்மையா accept பண்ணிக்கிட்டவங்க தான் இவங்க.

இதையெல்லாம் தாண்டி, ஐடி ஒரு கனவுத் தொழிற்சாலை. இங்க உங்க கனவுகளுக்காக வேலை பாக்குறீங்களா இல்லை அடுத்தவன் கனவுல நீங்க substituteஆ வேலை பாக்குறீங்களான்னு பாக்குறது மீதி இருக்க ரியாலிட்டி. It happens in the every industry. சரி, இத்தோட இந்த lengthy கதையை நிப்பாட்டிட்டு, அடுத்து உருப்படியா ஏதாவது பேசுவோம்.

ஒருவேளை, உங்களுக்கு ஐடி மேல திடீர்னு ஆர்வம் வந்திடுச்சு ஆனா இது வரைக்கும் காலேஜ்ல போய் BE,MCA,ME,Msc னு எதுவும் படிக்கலைனு நினைச்சிங்கன்னா, வருத்தமே வேண்டாம். ஏகப்பட்ட websites அதுல online courses இருக்கு. அதெல்லாம் படிங்க, படிக்கிறதோட மட்டும் இல்லாம படிச்சத வச்சு நாலு வெப்சைட், ரெண்டு மொபைல் ஆப்னு பண்ணி உங்களோட Portfolio டெவலப் பண்ணிட்டு உங்களுக்கு புடிச்ச கம்பெனியோட career page போய் பாருங்க. இங்க coding மட்டும் ஐடி இல்லங்க, ஐடில கோடிங் பண்றதும் ஒரு வேலை.

அமெரிக்கால Ex.Army மக்கள் நிறைய பேர் கோடிங் கத்துகிட்டு software companiesல join பண்றது இப்போ அடிக்கடி நடக்குது. சென்னை மாதிரியே, வந்தாரை வாழ வைக்கும் ஐடி.

இதுல இன்னொரு கள நிலவரம் என்னன்னா, சம்பாதிக்கிற பணத்தை உருப்படியா மெயின்டெயின் பண்ணத் தெரியாதவன் எந்த ஐடி வேலைல இருந்து, எவ்வளவு சம்பளமா வாங்கினாலும் மாசக்கடைசியில எப்படா இந்த மாசம் முடியும் னு காத்துகிட்டே இருக்க வேண்டியது தான்.

ஐடில நல்லதும் இருக்கு, அளவுக்கு மீறிய எதுவும் கெட்டதா மாறியும் இருக்கு. இதுக்கு பொத்தாம் பொதுவா ஐடி தான் பிரச்சனைனு சொல்லி முடிவு கற்றுறதுக்கு பதிலா, எல்லாப்பக்கமும் இருக்குற மக்கள் தான் ஐடிலயும் இருக்காங்க. இங்க பிரச்சனை ஐடில இல்லை, எல்லா வேலைகளைப் போலவும் ஐடில இருக்க மக்களோட தனிமனிதப் பிரச்சனைகள் வெளிய இருந்து பாக்குறப்போ ஐடியோட பிரச்சனையா பூதாகரமாகத் தெரியுது.

சென்னை எப்படி மொத்த தமிழ்மக்களோட கலவையான முகமா இருக்கோ அப்படித் தான் ஐடியும். அங்க இருக்க எல்லா மக்களோட ஆவெரேஜ் எதுவோ அதையெடுத்து நாம ஐடியோட முகமா வச்சிப்பேசுறோம். மத்தபடி எந்த வேலையும் புனிதமும் இல்லை, செய்யுற வேலையைப் புனிதப்படுத்தணும்னும் இல்லை. ஊர்ல இருக்க எல்லா வேலைகளை போலவும் இதுவும் இன்னுமொரு வேலை தான். மத்தபடி ஐடி வேலை ஈசியா? கஷ்டமா? னு கேட்கும் போது, It depends on the individual னு சொல்லலாம்.

The best 6 things I learned in my 26

Being in the twenties always an exciting one. Especially making a late twenties as a prime time of life is a good thing to cherish. Here are the best 6 things I learned in my 26.

 

1) Learn Finance
The early twenties are the best age to start learning about finance. Start to understand Assets, Liability, Value Appreciating things, Value Deprecating things, Scarcity, ROI, Compound Interest and Inflation.

You don’t need to come from an economics background to understand finance. Internet and informative people around you are enough to learn about Finance. In my opinion, Finance should be taught in school. If we want to enjoy the benefit of money then we should learn finance before start to earn. If you have the kids in your family, start to teach them finance. The only regret I had in this year is that I’m not aware of finance early. To read a good article on finance “Why I quit Google and built an app that teaches personal finance to kids” by Adam Naor https://link.medium.com/GgayS0jVXZ .

0_oygxV_7zS_lMPp96

2) Books are Overrated
In general, Books and Fruits are overrated. Choose good people over normal books. Good people = Good books = Good experiences.

Good Books > Normal People.
Normal Books < Good People.
Normal Books > Normal People.

Still, I say, Books are better than people at many times. Because books won’t miss a good reader.

christin-hume-k2Kcwkandwg-unsplash

3) Celebrate Yourself!
At the end of every day, it is you and you only. So Be Soft and Kind to yourself. Understand you to compose yourself again and again. Feed the best to you. Know your prime time in your life.

The thumb rule is mostly Masses are a fool. Prepare yourself to stand for the right thing against the mass’ flow (Avoid the Social Pressure, It affects you financially too). Staying away from the masses’ habit is a testimony for your determination. Surely it will you better.

At least, have one physical activity. It does not mean it will be built you, at worst times it will engage you. Give pain to your body, take credit and celebrate the moments. Move an extra inch each day.

Learn to appreciate each and every, tiny to tall size things. that’s how life gets better each day and every moment.

ian-stauffer-bH7kZ0yazB0-unsplash

4) Be Balanced
Practise and Learn to be balanced in everything. In simple terms, our thoughts are life. The Likes of Overthinking, overeating, overdoing anything can break us. Realising that we are starting to think can divert us from overthinking. To be balanced is one of the hardest skill IMHO. It starts with Self Realization and then to be Balanced state. Here is a good article to read about overthinking and a way to control it.
https://forge.medium.com/how-to-stop-overthinking-c3a98e81dc2a

jeremy-thomas-FO7bKvgETgQ-unsplash

5) It’s okay not to respect the people
It should be odd to hear for the first time. Give value to the people, and get value from the people. Make it mutual.
Respect != Value.
When you start to value the people, you don’t need to have namesake respect. Value > Respect. One of the best things I realized at this time.

Give value to everyone. At this moment, I see respect as a fake value.

liane-metzler-B32qg6Ua34Y-unsplash

6) Take a cold shower every morning
Take a cold shower, it does wonder. Every single time cold shower does the magic, even at 4 am or 4 pm. I never thought I can do this for the past 6 months.

jorge-fernandez-B-mDTp4ahZw-unsplash

 

Feeling grateful to the people whoever I met online/offline throughout the journey😍.
howard-riminton-CjI_2QX7hvU-unsplash
Spread Love & Peace❤️.
With ❤️ Ragu.

நாம் மழை இரசித்தல் என்பது…

நாம் இரசிக்கும் மழைத் தருணங்கள் மழைக்கு முந்திய மற்றும் மழைக்குப் பிந்திய அழகியத் துளி மழை நேரங்களில் இருக்கிறது.

மண் நனையுறதுக்கு முன்பான தூறலே நம் மனம் நனைய போதுமானதாக இருக்கும்போது, மத்தபடி மீதிப்பெய்யுற பெருமழை எல்லாம் சம்பிரதாயமா மண்ணுக்குப் பெய்யுற மழை மட்டும்தான். தூறல் மழைல நாம நனைந்த பிறகு, பெய்யுற பெருமழையெல்லாம் வேகமான சாரல் தானே!

புதுசா பூமியில பூத்திருக்குற குழந்தையின் பூம்பாதத்தில், கொஞ்சமா கொஞ்சிப் பேரழுத்தம் இல்லாம கொடுக்குற அன்பின் மென்முத்தங்கள் மாதிரியாகப் பெய்யுற தூறலும்,

வேண்டப்பட்டவங்களுக்கு ஆறுதல் சொல்லும் போது, எவ்வளவு சொன்னாலும் இன்னும் கொஞ்சம் சொல்லனுமேன்னு கிடந்து தவிக்கிற மனசு மாதிரி இப்போதைக்கு நிற்கவா? இல்லை இன்னும் கொஞ்சம் பெய்யவானு தெரியாம விட்டுவிட்டு விழுற பெருந்துளி கொண்ட கடைசி மழையும் தான் அடுத்த மழை வரை மனதுல ஈரத்தைக் கொடுத்துக்கிட்டு இருக்குது.

ஏதோவொரு மழைக்காலத்துல படிச்ச “நிகழ்கையில் சாரல், நினைக்க நினைக்க அது மழை”ங்குற வரி போல, மனசு உணர்ந்த சிறு மழை போதுமானதா இருக்குது அதுவே பிறகு பெருமழையா அது உருமாற!

மண் நனையுறதுக்கு முன்பான தூறல் நம் மனம் நனையப் போதுமானதாக இருக்கிறது. மத்தபடி மீதிப்பெய்யுற பெருமழை எல்லாம் சம்பிரதாயமா மண்ணுக்குப் பெய்யுற மழை மட்டும்தான்.

யோசிச்சுப் பார்த்தா, மழையை மட்டுமா இப்படி இரசிக்கிறோம்? இல்லை. இரசிக்கிற எல்லார்த்தையும் இப்படித்தான உணருறோம்…!

– ரகு
19-08-2019

எதை நோக்கிச் செல்கிறோம் – பருவம் 4 – ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்

ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் – ஒரு மாடர்ன் ராஜா கதை

வாழ்க்கைல விளையாடி முடிச்ச ஒரு தாத்தா,
விளையாட்ட வாழ்க்கையா வச்சிருக்க ஒரு விளையாட்டுக்காரன்,
இவங்க ரெண்டு பேர் கூட விளையாட்டுப் பையனொருத்தன். இப்படி மூனு தலைமுறையில இருந்து ஒவ்வொருத்தரும், ஒரு நேரத்துல ஒரு அனுபவத்துல வாழ்க்கையில நேரடியா, மறைமுகமா சந்திக்கிறாங்க…

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு, அந்த ராஜாவுக்கு ரெண்டு கொழந்தைக இருந்தாங்களாம்னு ஆரம்பிச்ச கதைகள மாதிரி இவங்க மூனு பேர் பத்தின மாடர்ன் ராஜா கதை இது.

patrick-hendry-1149471-unsplash.jpg

மொட்ட வெயிலுக்குக் கூட ஊருப்பக்கம் ஒதுங்காத மேகமெல்லாம் இந்த தாத்தாவும், பேரனும் இருந்த ஊரச்சுத்தி மெதந்ததுநால ஞாபக மறதில பெய்யுற மழை மட்டும் தான் அந்த ஊருக்கு வந்துட்டு போயிட்டு இருந்துச்சு. அந்த ஊர்ல இருந்த நிறைய குடைகளுக்கு இதுதான் கடைசி காலம், ஒரு புயலவோ, அடைமழையவோ பாத்துட்டா அது போதும்ங்குறது அந்த கருப்புக்குடைகளோட கடைசி ஆசையா இருந்துச்சு. மழை மறந்துபோன அந்த ஊருல வாழ்க்கைய விளையாடி முடிச்ச ஒரு தாத்தனும், அந்த நாட்டுல விளையாட்டவே வாழ்க்கையா வச்சிருக்க விளையாட்டுக்காரன் ஒருத்தனும், இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல விளையாட்டு பையனொருத்தனும் இருந்தாங்களாமான்னு சொல்லி ஆரம்பிக்கலாம்.

அந்த விளையாட்டுப் பையனுக்கு அந்த தாத்தா அப்பா வழித் தாத்தாவோ, அம்மா வழித் தாத்தாவோ கிடையாதாம், அவங்க வீட்டுக்குப் போற வழியில குடியிருக்குற பக்கத்து வீட்டுத் தாத்தாவ அந்தப் பையன் சொந்தத் தாத்தாவா வாங்கிக்கிட்டானாம் பேரன்பக் கொடுத்து, பேரன்பவிட வேறென்ன பெருசா கொடுத்துற முடியும் அந்தச் சின்ன பையன்கிட்ட இருந்து.

தாத்தா கூட இருந்த அந்த சின்ன பையனுக்கு, நெறையபேர் மாதிரி கிரிக்கெட் விளையாட்டுன்னா புடிக்கும். அந்த ஊருல மொத்தமா இருந்த நாலு டிவியில ஒரு டிவி அந்த தாத்தா வீட்டுல இருந்துச்சு, கிரிக்கெட் பாக்கனும்னு அந்தப் பேரனும், பொழுது போகனுமேன்னு அந்த தாத்தாவும் சேந்து ஒரு நாள் கிரிக்கெட் பாக்க ஆரம்பிச்சாங்க. இப்படித்தான் இவங்க நட்பு ஸ்டார்ட் ஆச்சு.

அந்த சின்ன பையனுக்கு அன்னைக்கு நடந்த கிரிக்கெட் மேட்ச்ல இருந்த நாலு பிலேயேர்ஸ் பேரு என்னன்னு தெரியும், அந்த தாத்தாவுக்கு ரெண்டு க்ரூப்ல விளையாடுறவனுகளோட சட்டை கலர்க்கு மட்டும் வித்தியாசம் தெரியும், இது ரெண்டு தான் இவங்க ரெண்டு பேருக்கும் இருந்த அதிகபட்ச கிரிக்கெட் அறிவே…

இப்படிக் கொஞ்ச நாள் போக அவங்க ரெண்டு பேரும் ஏதோ கொஞ்சம் நல்லா கிரிக்கெட் பாக்க கத்துக்கிட்டு இருந்தாங்க. அப்போ ஒரு மேட்சுல ராஜா மாதிரி நெறயா முடிவச்சுகிட்டு ஒருத்த வந்து விளையாட ஆரம்பிச்சான்.

நீளமா முடி வச்சுக்கிட்டு புதுசா வந்துருக்கவன பாத்ததும், அந்த தாத்தாவுக்கு ஏனோ அவன புடிச்சுப் போச்சு. என்னப்பா தம்பி இவன் ஏதோ நாம காட்டுல மம்முட்டிய புடிக்கிற மாதிரி புடிச்சுட்டு நிக்கிறான்னு சொல்லி அந்த புதுசா விளையாட வந்தவன ஞாபகம் வச்சுகிட்டாரு. இப்படியே கொஞ்ச நாள் கொஞ்ச மேட்ச் போகப்போக கூட்டத்தில இருந்தாலும் நீளமா முடி வச்சுருக்க விளையாட்டுக்காரன அந்தத் தாத்தா அடையாளம் கண்டுபுடிக்க ஆரம்பிச்சுட்டாரு. தாத்தாவும் பேரனும் சேர்ந்து பார்க்க ஆரம்பிச்ச கிரிக்கெட்ட, ஸ்கூல் லீவ் முடிஞ்சதும் கிரிக்கெட்க்கு லீவ் விட்டுட்டு அந்தச் சின்ன பையன் ஸ்கூலுக்குப் போயிட்டான். இப்போ அந்தத் தாத்தா தான் கிரிக்கெட்டுக்கு லீவ் விடாமா நல்ல தாத்தாவா மேட்ச்செல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டாரு.
இந்தப் பையன் நாலு மணிக்கு ஸ்கூல் முடிச்சுட்டு வீட்டுக்குப் போனா, “நம்மாளு விளையாடுறான்” வா தம்பி பாக்கலாம்னு கூப்பிட்டு ரெண்டு பேரும் சேந்து பாக்க ஆரம்பிச்சுடுவாங்க. எப்படின்னு தெரியலப்பா நம்மாளு மம்முட்டிய புடிக்கிற மாதிரி புடிச்சு அடிச்சாலும் பந்து எவன் கையிலயும் சிக்காம போயிருதுப்பான்னு பெரும்மையா பேரன்கிட்ட சொல்லிக்குவாரு தாத்தா.

இப்படியே நாள் கொஞ்சம், மாசம் கொஞ்சம், வருசம் கொஞ்சம்னு நிறையவே போயிருச்சு.

பனைமரமும், தென்னை மரமும் உசர இருந்த ஊர்ல, செல்போன் டவர் மரம் உசரமா இப்ப வளந்திருச்சு, கூடவே சேந்து அந்த ஸ்கூல் பையனும் சின்ன ஸ்கூல், பெரிய ஸ்கூல் அப்புறம் காலேஜ், அதுக்கப்புறம் எங்கயோ தூரத்துல வேலைன்னு அவனும் கொஞ்சம் உசரமா வளந்துட்டான். தாத்தாவும் அவரோட பங்குக்கு அவரும் இன்னும் கொஞ்சம் வயசாகி குழந்தையா வளந்துகிட்டு இருந்தாரு. இப்படித்தான எல்லாரும் கடைசியா மறுபடியிம் கொழந்தைய வளறப்போறோம்னு விளையாட்டா நினைச்சுக்குவானாம் அந்த வளந்த சின்னப் பையன்.

அந்த சின்னப் பையன், பெரிய பையனாகி அப்புறம் பெரிய ஆளா வளந்து இப்போ ஊருக்குப் போகுறப்போல்லாம், அந்தத் தாத்தா இன்னும் நிறையா வயசாகி வளந்து கைத்தடி வச்சு நடக்கப் பழகிக்கிட்டு இருந்தாரு. அவங்க ரெண்டு பேரும் ஒருகாலத்துல பாத்துகிட்டு இருந்த அந்த கிரிக்கெட் விளையாட்டுக்காரன், இப்பவும் அதே மாதிரி விளையாடிகிட்டு இருக்கான். இப்போ அந்த தாத்தாவுக்கு கிரிக்கெட்டும் அந்த தலைமுடி நிறைய வச்சிருந்த விளையாட்டுக்காரனையும் நியாபகத்துல இருக்குமான்னு தெரியல. அந்த சின்னப்பயனுக்கு இப்போ இருக்குற கவலையெல்லாம் எப்பவாது ஊருக்கு போயிட்டு வர்ற என்னைய எங்காவது மறந்துடுவாறோங்குறது தான்.

வேகமா அடிபட்ட கிரிக்கெட் பந்து மாதிரி வருஷங்களும் உருண்டோடிச்சு. கடந்த காலத்துக்கு போற வழி மட்டும் தான் தெரியும், திரும்பி வர்ற வழி தெரியாதுங்குற மாதிரி இப்போ அந்தச் சின்னப்பையன் இந்த நாளுக்கு திரும்பி வர்ற வழி தேடிட்டு இருந்து, எப்படியோ கஷ்டப்பட்டு நினைவுகளோடே கடைசி பஸ் புடிச்சு நிகழ்காலத்துக்கு வந்துட்டான்.

இந்த நாள், இந்த நைட்ல சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் டீமுக்கும் IPL லீக் மேட்ச் நடந்து முடிஞ்சிருக்கு. முதல்ல பேட்டிங் புடிச்ச சென்னை டீம் சென்னை சேப்பாக் sluggish பிட்ச்ல 170 ரன் எடுத்துச்சு. இருவது ஓவர் முடியுறப்போ 130 ரன் தான் வரும்னு எல்லாரும் நினைச்சிருந்தப்ப, 170 ரன்ன ஒத்த ஆளா அடிச்சு கொண்டுவந்தது “தல”தோனி. எப்பவும் சொல்லிக் கேக்குற மாதிரி இந்த மேட்ச்லயும் இன்னொரு “Dhoni finishes off in style; a magnificent strike into the crowd“. இன்னைக்கு நடந்த மேட்ச்சை அனுபவிச்சுப் பார்க்கனும்னா அதுக்கு நாம தோனியா இருந்திருக்கனும், இல்லை தோனி ரசிக்கிறவரா இருந்திருக்கனும்.

தாத்தாவை பாக்கும் போது தோனியும், தோனியை பாக்கும் போது தாத்தாவும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இந்தப்பேரனுக்கு நியாபகப்படுத்திட்டு போனாங்க. மீண்டும் ஒரு தாத்தாவிற்காகவும், தாத்தாவின் பேரனுக்காவும், இவன் தல தோனியா வருவான்னு நினைக்காம நிறைய தலைமுடி வச்ச தோனியாவே மனசுல பதிஞ்சு வச்சுக்கிட்ட தாத்தா பேரனின் மற்றும் ‘தல’ தோனிக்காகவும் காலம் காத்திருக்கும். இதில் தாத்தா, பேரன் மற்றும் தல தோனி இவர்களின் ஆளும், பேரும் மட்டும் மாறிக்கொண்டேயிருக்கும், அனுபவம் மட்டும் விக்ரமாத்தித்தனின் வேதாளம் போல அவர்களின் முதுகில் அமர்ந்து கொண்டே இருக்கும்…

ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு ஹீரோ தேவைப்படுவான், முந்தாநேத்து கபில்தேவ், நேத்து சச்சின் , டிராவிட் , கங்குலி, இன்னைக்கு தோனி நாளைக்கு கோஹ்லி னு அடுத்தது வந்துதான் ஆகணும். நாம ஹீரோவா மனசுல வச்சிருக்க ஒவ்வொருத்தரும் விளையாடுற வரைக்கும் நமக்குள்ள ஒளிஞ்சிருக்க அந்த சின்னப்பையன் அப்பப்போ வெளிய வந்து விளையாட்ட எட்டிப்பாத்துட்டு தான் போவான்.

தோனி – ப்ளாக் அண்ட் வொயிட் டீவில ஆரம்பிச்சு, 49′ இன்ச் ஸ்மார்ட் டிவி வரைக்கும் வந்து புளூ, வெள்ளை, மஞ்சள் கலர்ஸ் ஜெர்சியில கொடுத்த கலர்புல் மெமரீஸ் தான் தல தோனி.

நாம கொடுக்குறதுக்கு அன்பும், எடுத்துக்கிறதுக்கு அனுபவமும் இருக்குறவரைக்கும் தான வாழ்க்கை புதுசா இருக்கு… அந்த அனுபவத்தை தோனி குடுத்தா என்ன, சச்சின் குடுத்தா என்ன(…) காலத்துக்கு ஒவ்வொருத்தரா கொண்டாடிட்டு போவோம்.

பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனை சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!

– இன்னும் வளர்வான்…

அறுபதாம் வயதில் இருபதாகிறது காதல்

The place where my heart speaks

பதின் வயதுகளில்(teenage) மிகுதியான நிகழ்வுகள் பெரும்பொழுதுகளால் கட்டமைக்கப்பட்டவை, ஏனோ இருபத்திய வயதுகளில் நிகழ்வுகள் சிறுபொழுகளில் மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. பதின் வயதின் பள்ளி, கல்லூரி காலங்களில் கடிகார நொடி முள் அதற்கென உரிய நேர இடைவெளியில் துடித்து நகர்வதுண்டு, அதனால் நீண்ட பள்ளி, கல்லூரி வருடங்கள், நெடும் நாட்களுக்கு பார்த்து பழகக் கூடிய முகங்கள் என அமையும். ஆனால் இருபத்திய வயதுகளில் நம் கடிகாரத்தில் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு இடைவேளை இன்றி நொடி முள்ளை இரட்டைச் சக்கரம் கொண்டு ஓட வைக்கிறது.

எவ்வளவு செய்தாலும் ஏதோ மீதம் இருப்பதைப் போன்ற பரபரப்பு, கடல் சூழ் தீவென நம்மைச் சூழ்ந்து கொள்ள தொடங்குகிறது.இறுதி நிமிடங்களுக்கான பரபரப்பு ஆரம்பத்திலயே நமக்கு வந்திருக்கு.

அந்தப் பரபரப்பு, தனிமை, கூட்டம், தோல்வி, வெற்றியென, வீழ்ந்து எழவதென, நிராகரிப்பதும் ஏற்றுக்கொள்வதுமென தேடிச் செல்லும் தருணமிது எனக்கு இது…. மனம், மணம் என பல முடிவுகளின் தொடக்கமென தொடங்குகிறது இருபத்திய ஐந்தாவது வயதுகள்,
எல்லோரையும் போலவே எனக்கும் அவ்வாறே.

சமீபத்தில் நான் பார்த்த மற்றும் படித்த இரு நிகழ்வுகள், மணம், மனம், காதல் பற்றிய பொய் பிம்பங்களை உடைத்துத் தள்ளியது எனச் சொல்லலாம்.

நிகழ்வு 1:
கடந்த 40 ஆண்டுகளாக, 30 வயதைத் தாண்டிடாத முதுபெரும் இளைஞர் இவர், காதலுக்கு அடைமொழியாக இவர் பெயர் சொல்வதும் உண்டு. இவர் பெயர் தெரிய இன்னும் சில வரிகள் பயணிப்போம்,

சமீபத்தில் அந்த மாபெரும் நடிகரை…

View original post 528 more words

OMR #00.00 AM 

The place where my heart speaks

எல்லா நாட்களைப் போலவும் இல்லாத அந்த நாளுக்கு இருந்தது விடியல் இரண்டு.

24 மணி நேரம் கடிகாரத்துல இருந்தாலும், அதில் நாம் நாமாக இருக்கிறது பத்துப் பனிரெண்டு மணி நேரம் மட்டும் தான். மற்ற நேரங்களில் நமக்கான தயார்படுத்தலில் தாராளமாக்கப்படுகிறது.

ஒரு அல்லது ஒவ்வொரு நொடி நேரத்திற்கான மதிப்பு எல்லா நேரத்திலும் நம்மிடமிருந்து கிடைப்பதில்லை. ஆனால் அந்த இரவில் எனக்கது எதிர்மறையாய் அது இருந்தது.

சமீபத்திய நிகழ்வுளில் மிகத் தாமதமான இரவாக எனக்கது இருந்தது.

ஏன் “லேட்” ங்குற கேள்விக்கு பதில் என்னிடம் இருந்து தான் வந்தாக வேண்டுமென்பதாலோ என்னவோ , ஏன் லேட் ங்குற கேள்விய எனக்குள்ள திரும்பத் திரும்ப கேட்டுக்கிறதுக்கு பதிலாக அந்தக் கேள்விக்கான பதிலை தேடிய நேரமது.

கேள்வியும், அக்கேள்விக்கான பதிலும் நாமாகவே இருப்பது, இரு முனை கூர் கத்தி போன்றது. முட்டாள் கேள்வியோ, முட்டாள் பதிலோ அவ்விரண்டில் எதாவதொன்று நிகழ்ந்தால் பொருளற்றுப் போய் விடும் அவ்விரண்டுமே.

அன்றிறவு அலுவல்களுக்கிடையே கிளம்பி வரும் போது இரவு நேர மணி பத்தும் எனக்குப் பத்தாமல் போயிருந்தது.

அன்றைய நாளின் கடைசி ரயில் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். சென்னை கடற்கரை டூ வேளச்சேரி என்ற நீண்ட நெடும் பயணத்தில் நான் நடுவில் ஏறி கரையோரம் தரை காண்பது போல் மயிலாப்பூர் முதல் திருவான்மியூர் வரையிலான தொடர் பயணமது, சில நேரங்களில் பயணமும் ஒருவகை மதுவே.

முன்னோக்கி போகிற ரயிலில் இருந்து, நினைவெனும்…

View original post 494 more words

இருபத்தைந்தில் நான்

The place where my heart speaks

எனதிந்த இருபத்தைந்தாண்டுகள் பற்றியும், நான் என்னைச் சுய விமர்சனமும், சுய மதிப்பீடும் செய்து கொள்வதற்கான முயற்சி இந்தப் பதிவு. பதிவில் சுயபுராணம் வெகுவாகப் பரவிடக் கூடாதென்ற சுயவிமர்சனத்துடனும், சுய எச்சரிக்கையுடனும் இவ்விடம் தொடங்குகிறேன்.

ஆவணப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியமான ஒரு காரியம் என்று எனக்குப் புரிந்தது மிகச் சமீபத்தில் தான். காட்டுத் தீ போல அடுத்தடுத்த தலைமுறை தலைமுறையாக பரவிவந்த கதை என்னும் வரலாற்று காட்டுத் தீ , நம் தலைமுறைக்குப் பிறகு தீயும் தன் தாகம் குறைத்து தனல் பூக்கத் தொடங்கிவிடுமோ என்ற பயம் கலந்த வருத்தம் உண்டு.

வானம் பார்த்தபடி , மண் தரை விரிப்பில் அமர்ந்து , பாட்டிகள் அம்மாக்கள் மடியில் என் தலை சாய்த்து , நான் கேட்ட கதைகள் அப்போது நான் அன்னாந்து பார்த்த வானத்தை விட மிகப் பெரியது.
கதை சொன்னதால் தானோ என்னவோ அவர்கள் எனக்கு அவர்கள் தாத்தாவாகவும், பாட்டியாகவும் தெரிந்தார்கள். ஒருவேளை அவர்கள் கதைகளே சொல்லியிருக்காவிடில் நமக்கவர்கள் வயதான கிழவர்களாகவும், கிழவிகளாகவும் மட்டுமே நாம் எண்ணியிருக்கக் கூடுமோ என்னவோ?…
அடுத்த தலைமுறைக்கு நம்முன்னோர் நமக்களித்த அறிவைக் கொண்டு சேர்க்கவில்லையெனில் நம் வரலாறோ அல்லது நம் இனமோ அழிந்து விடுமா என்று கேட்டால் இது அழிவின் முடிவல்ல இது அழிவின் ஆரம்பம் மட்டுமே என்று கூறலாம்.
நமது வரலாற்று ஆய்வுகளை நாம் சற்று ஆய்ந்து பார்த்தால் நம்மைச் சுற்றி நடந்த பெரும்பாலான அகழ்வாய்வுகள்…

View original post 683 more words

எதை நோக்கிச் செல்கிறோம் – பருவம் 3

பள்ளிக்கூடம் + பஞ்சர் சைக்கிள் makes best pair

துணைக்கு தூக்கம் வராத நெடும் இருபத்திய வயதுகளின்
நெடிய இரவுகள்
நினைவுகளில் நிரம்பியிருக்கையில்
பள்ளிப்பருவத்தில் பஞ்சரான சைக்கிளைத் தனியே தள்ளிச் சென்று வீடு சேர்ந்ததை நியாபகப்படுத்திவிட்டு போகுது.

குறுகலான நெடும் சாலையும், அதில் குட்டிச் சைக்கிளுடன் நெடும் பயணமும் தினமும் சாத்தியம் தான் என்றாலும், எப்போதாவது பஞ்சர் ஆகிப் போயிருக்கும் சைக்கிளுடன் அந்த மாலை நேரங்களைச் சந்திக்கையில் மனம் ஒரு திருவிழாக்கால சந்தோசத்திற்கு இணையா மாறிப்போனதுண்டு.

இன்னைக்கு வரை நல்லா என்கூட வந்த சைக்கிள் இது, நாளைக்கு விடிஞ்சா என் கூட நல்லா வரப்போற சைக்கிளும் இதுதான், என்ன ஒன்னு இப்போ ஒரு வீல் பஞ்சராகிப் போயிருச்சு, எப்படியும் வீட்டுக்குப் போகத்தான் போறோம் ஆனா எப்போ போய்ச்சேருவோம்னு தான் தெரியாது. சரி வாடா இன்னைக்கு ஒருநாள் இதுவரை ஓடின சைக்கிளுக்கு துணையா நடந்து போய்த்தான் பார்த்திடுவோம்ங்கிற மன ஓட்டங்கள் தான் அப்போ எல்லாம் சைக்கிளையும், என்னையும் வீடு சேர்த்துச்சு. ஓடுறது, தாண்டுறது எல்லாம் எப்படி விளையாட்டோ அதே மாதிரி தான் அந்த பஞ்சரான சைக்கிள தள்ளிகிட்டு நடந்து போனதும் விளையாட்டாவே தோனுச்சு.

எப்பவும் டைம் டேபிள் போட்டு வாழ்ந்த பள்ளிப்பருவத்துல பஞ்சாராகிப் போன சைக்கிள் கொடுக்குற அந்த ஒரு சில மணி நேர புது அனுபவம் அந்த வயதுல இனம் புரியாத சந்தோசத்தை குடுத்திருக்கு.
இந்த சைக்கிளை காரணமா வச்சி இன்னைக்கு வீட்டுக்கு இருட்டினதுக்கு அப்புறம் லேட்டா போயிக்கலாம், இவ்வளவு நாள் பகல் நேரத்துல மட்டும் பழக்கப்பட்ட இந்த ரோடு இருட்டாகும் போது எப்படி இருக்கும்னு இன்னைக்காவது பார்த்திடனும்னும், நாளைக்கு காலைல ஸ்கூல் பிரண்ட்ஸ்ககிட்ட நேத்து நைட்டு வீட்டுக்குப் போனதைப் பத்தி சொல்றதுன்னு ஏதாவதொரு அற்ப விசயத்துல சந்தோசத்தை புதைச்சு வைச்சிருந்த அந்த வயசோட அட்வென்சர்ஸ் பயணம் அது.

இதுக்கு நடுவுல பஞ்சராகிப் போன சைக்கிள தள்ளிகிட்டுப்போக பாரமா இருக்குதேன்னு தோணாம, கூட கைத்துணையா இதாவது இருக்கேன்னு சந்தோசப்பட்டும், பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாததால ஒரு பேச்சுக்கு துணையா சைக்கிள் பெல்ல அடிக்கடி அழுத்தி தனியா பாடியபடி, பேசியபடி ஒருவழியா வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறப்போ பஞ்சரான சைக்கிளோட சுமை மறந்த தினங்கள் அந்த வயதுக்கான பேரனுபவங்கள்.

வழக்கமான பயணத்தை விட
பஞ்சரான சைக்கிளுடன் நடந்து செல்லும் பயணம் ஒரு சிறு திருவிழா நேரமாகிறது மனதிற்கு. ஏன்னா திருவிழாக்கள் எப்பவும் போல இருக்கிற மற்றொரு நாளா அது இருக்கிறதில்ல. வழக்கமான கட்டுப்பாடுகளும், கவனிப்புகளும் இல்லாம இருக்கிறதாலயே அது பாதி திருவிழாவா அது ஆயிடுது. அதிலயும் மழைபெய்யுற பொழுதோட பஞ்சராகிப் போகிற சைக்கிள்கள் எல்லாம் அடைமழைல ஐஸ்கிரீம் சாப்பிடுற மாதிரியான ஒரு மகிழ்ச்சியை கொடுத்திட்டுப் போகும். மழைக்கு நாம பயப்படுறது எல்லாம் அது நம்மள நனைக்காத வரைக்கும் மட்டும் தான. முழுசா நனையுறப்போ மழையும் நாமளும் ஒன்னா ஆயிடுறோம்.

இன்னைக்கும் பழைய பள்ளிக்கூடப் பயணத்தை நினைச்சுப் பார்க்கிறப்போ பயணத்துக்கு உதவாத அந்த பஞ்சராகிப் போன சைக்கிளோட பயணிச்சு வந்த நாட்கள் தான் சட்டென நியாபகத்தில வருது. பஞ்சராகிப் போன சைக்கிள்ல எவ்வளவு தூரம் போக முடியும்னு கேட்டா இதோ வருசம் பத்துக்கு மேல ஆச்சு, ஆனா இன்னும் அந்தப் பயணம் என் கூடவே வந்துகிட்டு இருக்குன்னு சொல்லுவேன். மழைவராத இந்த இரவுல கூட நனைச்சுப் பாக்குறப்போ அந்த வயசுல பஞ்சரான சைக்கிளோட நானும் நனைஞ்ச மழை ஈரம் மனதோரமா இன்னும் உலராம இருக்கு.

இப்படி எல்லாம் நினைச்சுகிட்டு இருக்க இன்னைக்கு நைட்டுல இருந்து பார்த்தா பள்ளிக்கூட சைக்கிளைத் தொட்டு கிட்டத்தட்ட பத்து வருசம் ஆயிருச்சு. ஆனா சைக்கிளையும் அந்த பள்ளிக்கூட பயணத்தையும் தவிர வேற எதுவும் பெருசா மாறிப்போகல.

இன்னைக்கும் அதே நெடும் தூரமும், அதே நெடும் பயணமும் வளர்ந்துக்கிட்டே தான் இருக்கு. இன்னைக்கோ நாளைக்கோ இப்போ நான் போயிக்கிட்டு இருக்க பெரிய சைக்கிள் பஞ்சராகத்தான் போகுது, அதுக்காக சைக்கிளை தள்ளிட்டு நடந்து போய்கிட்டா இருக்க முடியும்.
வடிவேலு ஸ்டைல்ல சொல்லனும்னா, பஞ்சராகாத சைக்கிள் டையர் எங்க இருக்கு (சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு ங்குற மாடுலேஷன்ல படிச்சுப் பாக்கவும்).

ஓடுற வரைக்கும் தான இங்க இருக்க முடியும்ங்குறது இவ்வளவு நாள் ஓடிவந்தத திரும்பிப் பாக்கிறப்போ தெரியுது. அப்புறம் ஏன் சும்மா நிக்கனும் ரோடு தீருற வரைக்கும் அதுகூட ஓடிக்கிட்டு இருக்க வேண்டியது தான்.