எதை நோக்கிச் செல்கிறோம் – பருவம் 3

பள்ளிக்கூடம் + பஞ்சர் சைக்கிள் makes best pair

துணைக்கு தூக்கம் வராத நெடும் இருபத்திய வயதுகளின்
நெடிய இரவுகள்
நினைவுகளில் நிரம்பியிருக்கையில்
பள்ளிப்பருவத்தில் பஞ்சரான சைக்கிளைத் தனியே தள்ளிச் சென்று வீடு சேர்ந்ததை நியாபகப்படுத்திவிட்டு போகுது.

குறுகலான நெடும் சாலையும், அதில் குட்டிச் சைக்கிளுடன் நெடும் பயணமும் தினமும் சாத்தியம் தான் என்றாலும், எப்போதாவது பஞ்சர் ஆகிப் போயிருக்கும் சைக்கிளுடன் அந்த மாலை நேரங்களைச் சந்திக்கையில் மனம் ஒரு திருவிழாக்கால சந்தோசத்திற்கு இணையா மாறிப்போனதுண்டு.

இன்னைக்கு வரை நல்லா என்கூட வந்த சைக்கிள் இது, நாளைக்கு விடிஞ்சா என் கூட நல்லா வரப்போற சைக்கிளும் இதுதான், என்ன ஒன்னு இப்போ ஒரு வீல் பஞ்சராகிப் போயிருச்சு, எப்படியும் வீட்டுக்குப் போகத்தான் போறோம் ஆனா எப்போ போய்ச்சேருவோம்னு தான் தெரியாது. சரி வாடா இன்னைக்கு ஒருநாள் இதுவரை ஓடின சைக்கிளுக்கு துணையா நடந்து போய்த்தான் பார்த்திடுவோம்ங்கிற மன ஓட்டங்கள் தான் அப்போ எல்லாம் சைக்கிளையும், என்னையும் வீடு சேர்த்துச்சு. ஓடுறது, தாண்டுறது எல்லாம் எப்படி விளையாட்டோ அதே மாதிரி தான் அந்த பஞ்சரான சைக்கிள தள்ளிகிட்டு நடந்து போனதும் விளையாட்டாவே தோனுச்சு.

எப்பவும் டைம் டேபிள் போட்டு வாழ்ந்த பள்ளிப்பருவத்துல பஞ்சாராகிப் போன சைக்கிள் கொடுக்குற அந்த ஒரு சில மணி நேர புது அனுபவம் அந்த வயதுல இனம் புரியாத சந்தோசத்தை குடுத்திருக்கு.
இந்த சைக்கிளை காரணமா வச்சி இன்னைக்கு வீட்டுக்கு இருட்டினதுக்கு அப்புறம் லேட்டா போயிக்கலாம், இவ்வளவு நாள் பகல் நேரத்துல மட்டும் பழக்கப்பட்ட இந்த ரோடு இருட்டாகும் போது எப்படி இருக்கும்னு இன்னைக்காவது பார்த்திடனும்னும், நாளைக்கு காலைல ஸ்கூல் பிரண்ட்ஸ்ககிட்ட நேத்து நைட்டு வீட்டுக்குப் போனதைப் பத்தி சொல்றதுன்னு ஏதாவதொரு அற்ப விசயத்துல சந்தோசத்தை புதைச்சு வைச்சிருந்த அந்த வயசோட அட்வென்சர்ஸ் பயணம் அது.

இதுக்கு நடுவுல பஞ்சராகிப் போன சைக்கிள தள்ளிகிட்டுப்போக பாரமா இருக்குதேன்னு தோணாம, கூட கைத்துணையா இதாவது இருக்கேன்னு சந்தோசப்பட்டும், பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாததால ஒரு பேச்சுக்கு துணையா சைக்கிள் பெல்ல அடிக்கடி அழுத்தி தனியா பாடியபடி, பேசியபடி ஒருவழியா வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறப்போ பஞ்சரான சைக்கிளோட சுமை மறந்த தினங்கள் அந்த வயதுக்கான பேரனுபவங்கள்.

வழக்கமான பயணத்தை விட
பஞ்சரான சைக்கிளுடன் நடந்து செல்லும் பயணம் ஒரு சிறு திருவிழா நேரமாகிறது மனதிற்கு. ஏன்னா திருவிழாக்கள் எப்பவும் போல இருக்கிற மற்றொரு நாளா அது இருக்கிறதில்ல. வழக்கமான கட்டுப்பாடுகளும், கவனிப்புகளும் இல்லாம இருக்கிறதாலயே அது பாதி திருவிழாவா அது ஆயிடுது. அதிலயும் மழைபெய்யுற பொழுதோட பஞ்சராகிப் போகிற சைக்கிள்கள் எல்லாம் அடைமழைல ஐஸ்கிரீம் சாப்பிடுற மாதிரியான ஒரு மகிழ்ச்சியை கொடுத்திட்டுப் போகும். மழைக்கு நாம பயப்படுறது எல்லாம் அது நம்மள நனைக்காத வரைக்கும் மட்டும் தான. முழுசா நனையுறப்போ மழையும் நாமளும் ஒன்னா ஆயிடுறோம்.

இன்னைக்கும் பழைய பள்ளிக்கூடப் பயணத்தை நினைச்சுப் பார்க்கிறப்போ பயணத்துக்கு உதவாத அந்த பஞ்சராகிப் போன சைக்கிளோட பயணிச்சு வந்த நாட்கள் தான் சட்டென நியாபகத்தில வருது. பஞ்சராகிப் போன சைக்கிள்ல எவ்வளவு தூரம் போக முடியும்னு கேட்டா இதோ வருசம் பத்துக்கு மேல ஆச்சு, ஆனா இன்னும் அந்தப் பயணம் என் கூடவே வந்துகிட்டு இருக்குன்னு சொல்லுவேன். மழைவராத இந்த இரவுல கூட நனைச்சுப் பாக்குறப்போ அந்த வயசுல பஞ்சரான சைக்கிளோட நானும் நனைஞ்ச மழை ஈரம் மனதோரமா இன்னும் உலராம இருக்கு.

இப்படி எல்லாம் நினைச்சுகிட்டு இருக்க இன்னைக்கு நைட்டுல இருந்து பார்த்தா பள்ளிக்கூட சைக்கிளைத் தொட்டு கிட்டத்தட்ட பத்து வருசம் ஆயிருச்சு. ஆனா சைக்கிளையும் அந்த பள்ளிக்கூட பயணத்தையும் தவிர வேற எதுவும் பெருசா மாறிப்போகல.

இன்னைக்கும் அதே நெடும் தூரமும், அதே நெடும் பயணமும் வளர்ந்துக்கிட்டே தான் இருக்கு. இன்னைக்கோ நாளைக்கோ இப்போ நான் போயிக்கிட்டு இருக்க பெரிய சைக்கிள் பஞ்சராகத்தான் போகுது, அதுக்காக சைக்கிளை தள்ளிட்டு நடந்து போய்கிட்டா இருக்க முடியும்.
வடிவேலு ஸ்டைல்ல சொல்லனும்னா, பஞ்சராகாத சைக்கிள் டையர் எங்க இருக்கு (சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு ங்குற மாடுலேஷன்ல படிச்சுப் பாக்கவும்).

ஓடுற வரைக்கும் தான இங்க இருக்க முடியும்ங்குறது இவ்வளவு நாள் ஓடிவந்தத திரும்பிப் பாக்கிறப்போ தெரியுது. அப்புறம் ஏன் சும்மா நிக்கனும் ரோடு தீருற வரைக்கும் அதுகூட ஓடிக்கிட்டு இருக்க வேண்டியது தான்.

Leave a comment