எதை நோக்கிச் செல்கிறோம் – பருவம் 4 – ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்

ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் – ஒரு மாடர்ன் ராஜா கதை

வாழ்க்கைல விளையாடி முடிச்ச ஒரு தாத்தா,
விளையாட்ட வாழ்க்கையா வச்சிருக்க ஒரு விளையாட்டுக்காரன்,
இவங்க ரெண்டு பேர் கூட விளையாட்டுப் பையனொருத்தன். இப்படி மூனு தலைமுறையில இருந்து ஒவ்வொருத்தரும், ஒரு நேரத்துல ஒரு அனுபவத்துல வாழ்க்கையில நேரடியா, மறைமுகமா சந்திக்கிறாங்க…

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு, அந்த ராஜாவுக்கு ரெண்டு கொழந்தைக இருந்தாங்களாம்னு ஆரம்பிச்ச கதைகள மாதிரி இவங்க மூனு பேர் பத்தின மாடர்ன் ராஜா கதை இது.

patrick-hendry-1149471-unsplash.jpg

மொட்ட வெயிலுக்குக் கூட ஊருப்பக்கம் ஒதுங்காத மேகமெல்லாம் இந்த தாத்தாவும், பேரனும் இருந்த ஊரச்சுத்தி மெதந்ததுநால ஞாபக மறதில பெய்யுற மழை மட்டும் தான் அந்த ஊருக்கு வந்துட்டு போயிட்டு இருந்துச்சு. அந்த ஊர்ல இருந்த நிறைய குடைகளுக்கு இதுதான் கடைசி காலம், ஒரு புயலவோ, அடைமழையவோ பாத்துட்டா அது போதும்ங்குறது அந்த கருப்புக்குடைகளோட கடைசி ஆசையா இருந்துச்சு. மழை மறந்துபோன அந்த ஊருல வாழ்க்கைய விளையாடி முடிச்ச ஒரு தாத்தனும், அந்த நாட்டுல விளையாட்டவே வாழ்க்கையா வச்சிருக்க விளையாட்டுக்காரன் ஒருத்தனும், இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல விளையாட்டு பையனொருத்தனும் இருந்தாங்களாமான்னு சொல்லி ஆரம்பிக்கலாம்.

அந்த விளையாட்டுப் பையனுக்கு அந்த தாத்தா அப்பா வழித் தாத்தாவோ, அம்மா வழித் தாத்தாவோ கிடையாதாம், அவங்க வீட்டுக்குப் போற வழியில குடியிருக்குற பக்கத்து வீட்டுத் தாத்தாவ அந்தப் பையன் சொந்தத் தாத்தாவா வாங்கிக்கிட்டானாம் பேரன்பக் கொடுத்து, பேரன்பவிட வேறென்ன பெருசா கொடுத்துற முடியும் அந்தச் சின்ன பையன்கிட்ட இருந்து.

தாத்தா கூட இருந்த அந்த சின்ன பையனுக்கு, நெறையபேர் மாதிரி கிரிக்கெட் விளையாட்டுன்னா புடிக்கும். அந்த ஊருல மொத்தமா இருந்த நாலு டிவியில ஒரு டிவி அந்த தாத்தா வீட்டுல இருந்துச்சு, கிரிக்கெட் பாக்கனும்னு அந்தப் பேரனும், பொழுது போகனுமேன்னு அந்த தாத்தாவும் சேந்து ஒரு நாள் கிரிக்கெட் பாக்க ஆரம்பிச்சாங்க. இப்படித்தான் இவங்க நட்பு ஸ்டார்ட் ஆச்சு.

அந்த சின்ன பையனுக்கு அன்னைக்கு நடந்த கிரிக்கெட் மேட்ச்ல இருந்த நாலு பிலேயேர்ஸ் பேரு என்னன்னு தெரியும், அந்த தாத்தாவுக்கு ரெண்டு க்ரூப்ல விளையாடுறவனுகளோட சட்டை கலர்க்கு மட்டும் வித்தியாசம் தெரியும், இது ரெண்டு தான் இவங்க ரெண்டு பேருக்கும் இருந்த அதிகபட்ச கிரிக்கெட் அறிவே…

இப்படிக் கொஞ்ச நாள் போக அவங்க ரெண்டு பேரும் ஏதோ கொஞ்சம் நல்லா கிரிக்கெட் பாக்க கத்துக்கிட்டு இருந்தாங்க. அப்போ ஒரு மேட்சுல ராஜா மாதிரி நெறயா முடிவச்சுகிட்டு ஒருத்த வந்து விளையாட ஆரம்பிச்சான்.

நீளமா முடி வச்சுக்கிட்டு புதுசா வந்துருக்கவன பாத்ததும், அந்த தாத்தாவுக்கு ஏனோ அவன புடிச்சுப் போச்சு. என்னப்பா தம்பி இவன் ஏதோ நாம காட்டுல மம்முட்டிய புடிக்கிற மாதிரி புடிச்சுட்டு நிக்கிறான்னு சொல்லி அந்த புதுசா விளையாட வந்தவன ஞாபகம் வச்சுகிட்டாரு. இப்படியே கொஞ்ச நாள் கொஞ்ச மேட்ச் போகப்போக கூட்டத்தில இருந்தாலும் நீளமா முடி வச்சுருக்க விளையாட்டுக்காரன அந்தத் தாத்தா அடையாளம் கண்டுபுடிக்க ஆரம்பிச்சுட்டாரு. தாத்தாவும் பேரனும் சேர்ந்து பார்க்க ஆரம்பிச்ச கிரிக்கெட்ட, ஸ்கூல் லீவ் முடிஞ்சதும் கிரிக்கெட்க்கு லீவ் விட்டுட்டு அந்தச் சின்ன பையன் ஸ்கூலுக்குப் போயிட்டான். இப்போ அந்தத் தாத்தா தான் கிரிக்கெட்டுக்கு லீவ் விடாமா நல்ல தாத்தாவா மேட்ச்செல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டாரு.
இந்தப் பையன் நாலு மணிக்கு ஸ்கூல் முடிச்சுட்டு வீட்டுக்குப் போனா, “நம்மாளு விளையாடுறான்” வா தம்பி பாக்கலாம்னு கூப்பிட்டு ரெண்டு பேரும் சேந்து பாக்க ஆரம்பிச்சுடுவாங்க. எப்படின்னு தெரியலப்பா நம்மாளு மம்முட்டிய புடிக்கிற மாதிரி புடிச்சு அடிச்சாலும் பந்து எவன் கையிலயும் சிக்காம போயிருதுப்பான்னு பெரும்மையா பேரன்கிட்ட சொல்லிக்குவாரு தாத்தா.

இப்படியே நாள் கொஞ்சம், மாசம் கொஞ்சம், வருசம் கொஞ்சம்னு நிறையவே போயிருச்சு.

பனைமரமும், தென்னை மரமும் உசர இருந்த ஊர்ல, செல்போன் டவர் மரம் உசரமா இப்ப வளந்திருச்சு, கூடவே சேந்து அந்த ஸ்கூல் பையனும் சின்ன ஸ்கூல், பெரிய ஸ்கூல் அப்புறம் காலேஜ், அதுக்கப்புறம் எங்கயோ தூரத்துல வேலைன்னு அவனும் கொஞ்சம் உசரமா வளந்துட்டான். தாத்தாவும் அவரோட பங்குக்கு அவரும் இன்னும் கொஞ்சம் வயசாகி குழந்தையா வளந்துகிட்டு இருந்தாரு. இப்படித்தான எல்லாரும் கடைசியா மறுபடியிம் கொழந்தைய வளறப்போறோம்னு விளையாட்டா நினைச்சுக்குவானாம் அந்த வளந்த சின்னப் பையன்.

அந்த சின்னப் பையன், பெரிய பையனாகி அப்புறம் பெரிய ஆளா வளந்து இப்போ ஊருக்குப் போகுறப்போல்லாம், அந்தத் தாத்தா இன்னும் நிறையா வயசாகி வளந்து கைத்தடி வச்சு நடக்கப் பழகிக்கிட்டு இருந்தாரு. அவங்க ரெண்டு பேரும் ஒருகாலத்துல பாத்துகிட்டு இருந்த அந்த கிரிக்கெட் விளையாட்டுக்காரன், இப்பவும் அதே மாதிரி விளையாடிகிட்டு இருக்கான். இப்போ அந்த தாத்தாவுக்கு கிரிக்கெட்டும் அந்த தலைமுடி நிறைய வச்சிருந்த விளையாட்டுக்காரனையும் நியாபகத்துல இருக்குமான்னு தெரியல. அந்த சின்னப்பயனுக்கு இப்போ இருக்குற கவலையெல்லாம் எப்பவாது ஊருக்கு போயிட்டு வர்ற என்னைய எங்காவது மறந்துடுவாறோங்குறது தான்.

வேகமா அடிபட்ட கிரிக்கெட் பந்து மாதிரி வருஷங்களும் உருண்டோடிச்சு. கடந்த காலத்துக்கு போற வழி மட்டும் தான் தெரியும், திரும்பி வர்ற வழி தெரியாதுங்குற மாதிரி இப்போ அந்தச் சின்னப்பையன் இந்த நாளுக்கு திரும்பி வர்ற வழி தேடிட்டு இருந்து, எப்படியோ கஷ்டப்பட்டு நினைவுகளோடே கடைசி பஸ் புடிச்சு நிகழ்காலத்துக்கு வந்துட்டான்.

இந்த நாள், இந்த நைட்ல சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் டீமுக்கும் IPL லீக் மேட்ச் நடந்து முடிஞ்சிருக்கு. முதல்ல பேட்டிங் புடிச்ச சென்னை டீம் சென்னை சேப்பாக் sluggish பிட்ச்ல 170 ரன் எடுத்துச்சு. இருவது ஓவர் முடியுறப்போ 130 ரன் தான் வரும்னு எல்லாரும் நினைச்சிருந்தப்ப, 170 ரன்ன ஒத்த ஆளா அடிச்சு கொண்டுவந்தது “தல”தோனி. எப்பவும் சொல்லிக் கேக்குற மாதிரி இந்த மேட்ச்லயும் இன்னொரு “Dhoni finishes off in style; a magnificent strike into the crowd“. இன்னைக்கு நடந்த மேட்ச்சை அனுபவிச்சுப் பார்க்கனும்னா அதுக்கு நாம தோனியா இருந்திருக்கனும், இல்லை தோனி ரசிக்கிறவரா இருந்திருக்கனும்.

தாத்தாவை பாக்கும் போது தோனியும், தோனியை பாக்கும் போது தாத்தாவும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இந்தப்பேரனுக்கு நியாபகப்படுத்திட்டு போனாங்க. மீண்டும் ஒரு தாத்தாவிற்காகவும், தாத்தாவின் பேரனுக்காவும், இவன் தல தோனியா வருவான்னு நினைக்காம நிறைய தலைமுடி வச்ச தோனியாவே மனசுல பதிஞ்சு வச்சுக்கிட்ட தாத்தா பேரனின் மற்றும் ‘தல’ தோனிக்காகவும் காலம் காத்திருக்கும். இதில் தாத்தா, பேரன் மற்றும் தல தோனி இவர்களின் ஆளும், பேரும் மட்டும் மாறிக்கொண்டேயிருக்கும், அனுபவம் மட்டும் விக்ரமாத்தித்தனின் வேதாளம் போல அவர்களின் முதுகில் அமர்ந்து கொண்டே இருக்கும்…

ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு ஹீரோ தேவைப்படுவான், முந்தாநேத்து கபில்தேவ், நேத்து சச்சின் , டிராவிட் , கங்குலி, இன்னைக்கு தோனி நாளைக்கு கோஹ்லி னு அடுத்தது வந்துதான் ஆகணும். நாம ஹீரோவா மனசுல வச்சிருக்க ஒவ்வொருத்தரும் விளையாடுற வரைக்கும் நமக்குள்ள ஒளிஞ்சிருக்க அந்த சின்னப்பையன் அப்பப்போ வெளிய வந்து விளையாட்ட எட்டிப்பாத்துட்டு தான் போவான்.

தோனி – ப்ளாக் அண்ட் வொயிட் டீவில ஆரம்பிச்சு, 49′ இன்ச் ஸ்மார்ட் டிவி வரைக்கும் வந்து புளூ, வெள்ளை, மஞ்சள் கலர்ஸ் ஜெர்சியில கொடுத்த கலர்புல் மெமரீஸ் தான் தல தோனி.

நாம கொடுக்குறதுக்கு அன்பும், எடுத்துக்கிறதுக்கு அனுபவமும் இருக்குறவரைக்கும் தான வாழ்க்கை புதுசா இருக்கு… அந்த அனுபவத்தை தோனி குடுத்தா என்ன, சச்சின் குடுத்தா என்ன(…) காலத்துக்கு ஒவ்வொருத்தரா கொண்டாடிட்டு போவோம்.

பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனை சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!

– இன்னும் வளர்வான்…

One thought on “எதை நோக்கிச் செல்கிறோம் – பருவம் 4 – ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s