கடல் யாருக்குச் சொந்தம்?

இன்றைய காலை வேளையில், திருவான்மியூர் கடற்கரையில் இந்தப் படத்தில் நடுவே நிற்கும் பெரியவரைக் காண நேர்ந்தது.

SAVE_20200216_180511

அந்தப் பகுதியில் இருந்த மொத்தக் காக்கைகளும், நாய்களும் ஒரு சேர குழுமியிருந்ததைக் கண்டு, கடற்கரையின் மையத்திலிருந்த நான் இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். கூட்டமான காக்கைகளுக்கும், நாய்களுக்கும் நடுவே அறுபது வயதை ஒட்டிய பெரியவர் ஒருவர் தீனிகளை தன் கைப்பையிலிருந்து எடுத்து அங்கிருந்த காக்கைகளுக்கும், நாய்களுக்கும் மும்முரமாக வீசியபடி நின்றிருந்தார்.

சிறிது நேரத்தில் அவர் பையிலிருந்த அத்தனை தீனிகளையும் எடுத்து அவைகளுக்கு காலை உணவாக்கிவிட்டு, கொண்டுவந்த பாலிதீன் பைகளை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசினார். வந்த வேலை முடிந்ததென்ற நிறைவில் வட்டமிட்டு நின்ற காக்கைகளையும், நாய்களையும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு விருவிருவென கடற்கரையை விட்டு சாலையை நோக்கிச் சென்றபடி இருந்தார்.

அங்கு அவரைக் கவனித்ததில், அவர் கடலுக்கு வேடிக்கை பார்ப்பவராக வந்திருக்கவில்லை எனத் தோன்றியது. எப்படி ஒரு குறுநில விவசாயி காலை எழுந்ததும் தனது தோட்டத்தில் இருக்கும் ஆடு மாடுகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் தோட்டத்தைச் சுற்றி ஒரு வட்டமிட்டுச் செல்வானோ அப்படியே இருந்தது இந்தப் பெரியவரின் நடை, பாவனை எல்லாம். இப்பெரும் கடலின் உரிமையாளர் போல, காலையில் எழுந்ததும் அவசர அவசரமாக வந்து, ஒரு பெரும் பையில் தீனிகளை அங்கிருந்த கரை வாழ் உயிரினங்களுக்கு உரிமையாகப் பசியாற்றிவிட்டுச் சென்றிருந்தார் அந்தப் பெரியவர்.

பருவ காலத்து பேரழகியை விடவும் பேரழகாயிருந்தது அந்நேர சூரியோதயக் கடல். ஆனால், அதைக் கடைக்கண் கொண்டும் கவனித்தவராக அந்தப் பெரியவர் அப்போது இல்லை. கடல் நோக்கி அவர் சிறிதும் கவனிக்காது சென்றதைப் பார்த்தால், கடல் தன் சுய அழகின் மீது பெரும் சந்தேகம் கொண்டு சூரியக் கண்ணாடி பார்த்து தன் அழகை மீண்டும் சரி செய்திருக்கத்தான் வேண்டும். ஏனென்றால் அந்தக் காலை நேரத்தில் உலகில் இருந்த அத்தனை அழகியல்களை விடவும் அழகாக இருந்தது கடல். எந்தக் கேமிராவும், எந்தச் சொற்களும் அந்நேர முழுஅழகையும் பதிந்து வைக்கமுடியாத ஓரழகாக இருந்தது அது.

எந்நாளும், எழும்போதே கூடவரும் அழகெல்லாம் கடலுக்கு மட்டுமே வாய்த்ததாக இருக்க வேண்டும். எக்காலத்திலும் அது மனிதனுக்கெல்லாம் வரப்போவதில்லை.

வழியில் எதிர்வந்த பேரழகின் நேரெதிர் கண் பார்வையைத் தன் சுயநினைவுடன் புத்தன் எதிர்கொண்டவனாயிருந்தால் தன்நிலை தடுமாறி அவன் மனைக்கே திரும்பத் திருந்தி போயிருந்திருப்பான். அப்படியான கடலோடு சூரியன் எழும் ஓர் தருணத்தின் அழகிய தடுமாற்றத்தைத் துறந்த புத்தனாகக் கரையேறிக் கொண்டிருந்தார், நான் பெயரறியாத அந்தப் பெரியவர். அரண்மனை துறந்த புத்தனாக அவர் கடல் துறந்து சென்றபடி இருந்தார்.

IMG_20200216_063856

இதற்கிடையில், அந்தப் பெரியவர் கடற்கரையை விட்டு நெடுந்தூரம் சென்றிருந்தார். அவர் கூடவே, சிறிது தூரத்திற்கு காக்கைகளும், நாய்களும் சென்று பின்னர் கலைந்து சென்றன. வெகு இயல்பாக அந்தக் கடலும், கடற்கரையையும் தனக்கு சொந்தமென சொல்லாமல் சொல்லியபடிச் சென்றிருக்கிறார் அவர். அந்நேரத்தில் சென்னைக்குப் புதிதாக வந்த யாரேனும் இந்தக் கடல் யாருக்குச் சொந்தமானது எனக் கேட்டிருந்தால், திருவான்மியூரின் எல்லைக்குள் வரும் கடலும், கரையும் அவருக்குச் சொந்தமானது என்றிருப்பேன் நான்.

என்னைப் போல, எங்களைப் போல எத்தனையோ பேர் கடல் பார்க்க கரை ஒதுங்கியபடி இருந்தோம். எங்களின் வருகையை இக்கடல் எதிர்பார்த்திருக்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்தப் பெரியவரின் வருகையை இப்பெரும் கடல் எதிர்பார்த்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

கரை தொட்ட அலையைப் போல, கடல் தொட்ட அன்பாக அவர் அங்கு வந்து சென்றிந்தார். வங்கக் கடல் அவரின் அன்பின் ஆழிப்பேரலைக்காகக் காத்திருக்கும். இப்படியான மாமனிதர்களின் சுவடுகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது கடற்கரை. மனதில் ஒட்டிய கடற்கரை மணலை உதறாமல் திரும்ப வீடு வந்திருக்கிறேன் நான்.

 

நாள்: 16-02-2020

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s