இருபத்தைந்தில் நான்

The place where my heart speaks

எனதிந்த இருபத்தைந்தாண்டுகள் பற்றியும், நான் என்னைச் சுய விமர்சனமும், சுய மதிப்பீடும் செய்து கொள்வதற்கான முயற்சி இந்தப் பதிவு. பதிவில் சுயபுராணம் வெகுவாகப் பரவிடக் கூடாதென்ற சுயவிமர்சனத்துடனும், சுய எச்சரிக்கையுடனும் இவ்விடம் தொடங்குகிறேன்.

ஆவணப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியமான ஒரு காரியம் என்று எனக்குப் புரிந்தது மிகச் சமீபத்தில் தான். காட்டுத் தீ போல அடுத்தடுத்த தலைமுறை தலைமுறையாக பரவிவந்த கதை என்னும் வரலாற்று காட்டுத் தீ , நம் தலைமுறைக்குப் பிறகு தீயும் தன் தாகம் குறைத்து தனல் பூக்கத் தொடங்கிவிடுமோ என்ற பயம் கலந்த வருத்தம் உண்டு.

வானம் பார்த்தபடி , மண் தரை விரிப்பில் அமர்ந்து , பாட்டிகள் அம்மாக்கள் மடியில் என் தலை சாய்த்து , நான் கேட்ட கதைகள் அப்போது நான் அன்னாந்து பார்த்த வானத்தை விட மிகப் பெரியது.
கதை சொன்னதால் தானோ என்னவோ அவர்கள் எனக்கு அவர்கள் தாத்தாவாகவும், பாட்டியாகவும் தெரிந்தார்கள். ஒருவேளை அவர்கள் கதைகளே சொல்லியிருக்காவிடில் நமக்கவர்கள் வயதான கிழவர்களாகவும், கிழவிகளாகவும் மட்டுமே நாம் எண்ணியிருக்கக் கூடுமோ என்னவோ?…
அடுத்த தலைமுறைக்கு நம்முன்னோர் நமக்களித்த அறிவைக் கொண்டு சேர்க்கவில்லையெனில் நம் வரலாறோ அல்லது நம் இனமோ அழிந்து விடுமா என்று கேட்டால் இது அழிவின் முடிவல்ல இது அழிவின் ஆரம்பம் மட்டுமே என்று கூறலாம்.
நமது வரலாற்று ஆய்வுகளை நாம் சற்று ஆய்ந்து பார்த்தால் நம்மைச் சுற்றி நடந்த பெரும்பாலான அகழ்வாய்வுகள்…

View original post 683 more words

எதை நோக்கிச் செல்கிறோம் – பருவம் 3

பள்ளிக்கூடம் + பஞ்சர் சைக்கிள் makes best pair

துணைக்கு தூக்கம் வராத நெடும் இருபத்திய வயதுகளின்
நெடிய இரவுகள்
நினைவுகளில் நிரம்பியிருக்கையில்
பள்ளிப்பருவத்தில் பஞ்சரான சைக்கிளைத் தனியே தள்ளிச் சென்று வீடு சேர்ந்ததை நியாபகப்படுத்திவிட்டு போகுது.

குறுகலான நெடும் சாலையும், அதில் குட்டிச் சைக்கிளுடன் நெடும் பயணமும் தினமும் சாத்தியம் தான் என்றாலும், எப்போதாவது பஞ்சர் ஆகிப் போயிருக்கும் சைக்கிளுடன் அந்த மாலை நேரங்களைச் சந்திக்கையில் மனம் ஒரு திருவிழாக்கால சந்தோசத்திற்கு இணையா மாறிப்போனதுண்டு.

இன்னைக்கு வரை நல்லா என்கூட வந்த சைக்கிள் இது, நாளைக்கு விடிஞ்சா என் கூட நல்லா வரப்போற சைக்கிளும் இதுதான், என்ன ஒன்னு இப்போ ஒரு வீல் பஞ்சராகிப் போயிருச்சு, எப்படியும் வீட்டுக்குப் போகத்தான் போறோம் ஆனா எப்போ போய்ச்சேருவோம்னு தான் தெரியாது. சரி வாடா இன்னைக்கு ஒருநாள் இதுவரை ஓடின சைக்கிளுக்கு துணையா நடந்து போய்த்தான் பார்த்திடுவோம்ங்கிற மன ஓட்டங்கள் தான் அப்போ எல்லாம் சைக்கிளையும், என்னையும் வீடு சேர்த்துச்சு. ஓடுறது, தாண்டுறது எல்லாம் எப்படி விளையாட்டோ அதே மாதிரி தான் அந்த பஞ்சரான சைக்கிள தள்ளிகிட்டு நடந்து போனதும் விளையாட்டாவே தோனுச்சு.

எப்பவும் டைம் டேபிள் போட்டு வாழ்ந்த பள்ளிப்பருவத்துல பஞ்சாராகிப் போன சைக்கிள் கொடுக்குற அந்த ஒரு சில மணி நேர புது அனுபவம் அந்த வயதுல இனம் புரியாத சந்தோசத்தை குடுத்திருக்கு.
இந்த சைக்கிளை காரணமா வச்சி இன்னைக்கு வீட்டுக்கு இருட்டினதுக்கு அப்புறம் லேட்டா போயிக்கலாம், இவ்வளவு நாள் பகல் நேரத்துல மட்டும் பழக்கப்பட்ட இந்த ரோடு இருட்டாகும் போது எப்படி இருக்கும்னு இன்னைக்காவது பார்த்திடனும்னும், நாளைக்கு காலைல ஸ்கூல் பிரண்ட்ஸ்ககிட்ட நேத்து நைட்டு வீட்டுக்குப் போனதைப் பத்தி சொல்றதுன்னு ஏதாவதொரு அற்ப விசயத்துல சந்தோசத்தை புதைச்சு வைச்சிருந்த அந்த வயசோட அட்வென்சர்ஸ் பயணம் அது.

இதுக்கு நடுவுல பஞ்சராகிப் போன சைக்கிள தள்ளிகிட்டுப்போக பாரமா இருக்குதேன்னு தோணாம, கூட கைத்துணையா இதாவது இருக்கேன்னு சந்தோசப்பட்டும், பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாததால ஒரு பேச்சுக்கு துணையா சைக்கிள் பெல்ல அடிக்கடி அழுத்தி தனியா பாடியபடி, பேசியபடி ஒருவழியா வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறப்போ பஞ்சரான சைக்கிளோட சுமை மறந்த தினங்கள் அந்த வயதுக்கான பேரனுபவங்கள்.

வழக்கமான பயணத்தை விட
பஞ்சரான சைக்கிளுடன் நடந்து செல்லும் பயணம் ஒரு சிறு திருவிழா நேரமாகிறது மனதிற்கு. ஏன்னா திருவிழாக்கள் எப்பவும் போல இருக்கிற மற்றொரு நாளா அது இருக்கிறதில்ல. வழக்கமான கட்டுப்பாடுகளும், கவனிப்புகளும் இல்லாம இருக்கிறதாலயே அது பாதி திருவிழாவா அது ஆயிடுது. அதிலயும் மழைபெய்யுற பொழுதோட பஞ்சராகிப் போகிற சைக்கிள்கள் எல்லாம் அடைமழைல ஐஸ்கிரீம் சாப்பிடுற மாதிரியான ஒரு மகிழ்ச்சியை கொடுத்திட்டுப் போகும். மழைக்கு நாம பயப்படுறது எல்லாம் அது நம்மள நனைக்காத வரைக்கும் மட்டும் தான. முழுசா நனையுறப்போ மழையும் நாமளும் ஒன்னா ஆயிடுறோம்.

இன்னைக்கும் பழைய பள்ளிக்கூடப் பயணத்தை நினைச்சுப் பார்க்கிறப்போ பயணத்துக்கு உதவாத அந்த பஞ்சராகிப் போன சைக்கிளோட பயணிச்சு வந்த நாட்கள் தான் சட்டென நியாபகத்தில வருது. பஞ்சராகிப் போன சைக்கிள்ல எவ்வளவு தூரம் போக முடியும்னு கேட்டா இதோ வருசம் பத்துக்கு மேல ஆச்சு, ஆனா இன்னும் அந்தப் பயணம் என் கூடவே வந்துகிட்டு இருக்குன்னு சொல்லுவேன். மழைவராத இந்த இரவுல கூட நனைச்சுப் பாக்குறப்போ அந்த வயசுல பஞ்சரான சைக்கிளோட நானும் நனைஞ்ச மழை ஈரம் மனதோரமா இன்னும் உலராம இருக்கு.

இப்படி எல்லாம் நினைச்சுகிட்டு இருக்க இன்னைக்கு நைட்டுல இருந்து பார்த்தா பள்ளிக்கூட சைக்கிளைத் தொட்டு கிட்டத்தட்ட பத்து வருசம் ஆயிருச்சு. ஆனா சைக்கிளையும் அந்த பள்ளிக்கூட பயணத்தையும் தவிர வேற எதுவும் பெருசா மாறிப்போகல.

இன்னைக்கும் அதே நெடும் தூரமும், அதே நெடும் பயணமும் வளர்ந்துக்கிட்டே தான் இருக்கு. இன்னைக்கோ நாளைக்கோ இப்போ நான் போயிக்கிட்டு இருக்க பெரிய சைக்கிள் பஞ்சராகத்தான் போகுது, அதுக்காக சைக்கிளை தள்ளிட்டு நடந்து போய்கிட்டா இருக்க முடியும்.
வடிவேலு ஸ்டைல்ல சொல்லனும்னா, பஞ்சராகாத சைக்கிள் டையர் எங்க இருக்கு (சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு ங்குற மாடுலேஷன்ல படிச்சுப் பாக்கவும்).

ஓடுற வரைக்கும் தான இங்க இருக்க முடியும்ங்குறது இவ்வளவு நாள் ஓடிவந்தத திரும்பிப் பாக்கிறப்போ தெரியுது. அப்புறம் ஏன் சும்மா நிக்கனும் ரோடு தீருற வரைக்கும் அதுகூட ஓடிக்கிட்டு இருக்க வேண்டியது தான்.

Learnings in my 25

 

After having hits and flops in my 25, I just stepped into my 26.

Here are the learnings in my high and low…,

1) Drink a lot of water and don’t skip breakfast. It takes one night in the hospital to make it my all-time high priority. Visit the hospital sometime.

2) Morning walk at the beach is good for physical and mental health. One of the low cost or even free way to feel good. If you can’t afford a sea then you can at least spend time in the morning sun. Physical activities give you a mental freshness.

3) Build a team, Hire talents and Fire a people. Have a happy ending. Take decisions, play the real game. Don’t hire emotionally. We(People) are here to learn. Learning is moving. So allow anyone to be with you and move on you. Dependency makes you weak, but collaboration makes you stronger.

4) There are two types of history. One is what happened and another one is what we heard. In general, there is a pattern behind most of the impact people, they believed themselves so others also followed their belief.

5) Confidence, sense of humour, passion, interest, humanity, understandings are a new beauty to have.

6) The family is the best ever structure humans we found. In bad times, the family is more important than what we think.

7) Have two separate lives (Personal and Professional) and one character.

8) Don’t give special status easily to anything. Everything needs worth try and worth value to sustain for the long term. Short term people never stay long.

9) Read -> Learn -> Unlearn. Books are my best companions in my 25.

10) Have ME time. Spend time with your own self, your own self-needs you to listen. This is the best pleasure to have. that’s the one best advice nobody ever said to me.

12) Like the progress, love the critics.

13) Build -> Fail/Success -> Learn. Build something to build yourself. Have a crush/love on your products.

14) To build something as a team:
As a product owner Share the excitement, tell the impact, visualize the outcome, first make them interest, then ask them to involve and build the product. It really works well. Interest and passion are spreading the virus.

15) Enjoy the emoji, it conveys a lot which text can’t.❤️ It may look alike simple thing, but gives the value of a lot and adds more interest in a conversation.

16) Meditation is nothing but doing what you like with your topmost concentration.

இப்படியாகச் சில சந்திப்புகள்

நெடுபிரிவிற்குப் பிறகான நண்பனின்/ நண்பியின் சந்திப்பின் நிமிடங்கள், பெருங்கடல் முன் நின்று அதை அளந்திட தவிக்கும் சிறுகுழந்தையின் மனங்களையும், நிஜங்களையும் ஒத்தது.

இருவரின் இதற்கு முந்தைய சந்திப்பிலிருந்து இந்தச் சந்திப்பு வரை இடைப்பட்ட நாட்களில், ஒருவரின் அன்றாடங்களில் மற்றொருவர் இல்லாமல் போயிருப்பார்கள், இனிவரும் காலங்கள் இப்படியே ஆயினும் விளம்பர இடைவேளையாக இச்சிறு சந்திப்புகள் அவ்வப்போது வந்து செல்லும்.

இது தான் கடல், இங்கே தான் இது எப்போதும் இருக்கும், கணக்கிடப்பட்ட அடுத்த சில மணித்துளிகளில் நீ மட்டும் இதனிடமிருந்து நகர்ந்து செல்வாய், அதற்குள் காணும் காட்சிகள் கடலுக்கும், உனக்குமானது என்ற விதிகள் விட்டுச் செல்லப்படுகிறது, அப்பெரும் கடல் முன் நிற்கும் குழந்தையிடம்.

இந்த ஆழிப்பெரு வெளியில் ஆழச்செல்வதா இல்லை தூரச்செல்வதா எனத் தெரியாமல் அச்சிறுவன் கடலின் பெரும் துணையுடன் நின்றிருப்பது போல நட்பின் அந்தச் சந்திப்பில் பேச்சுகள் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளோ, ஒரு சில சம்பவங்களுக்குள்ளோ சுற்றிக்கொண்டிருக்கும்.

பேசிட ஈராயிரம் இருப்பினும், பெரிதாக எதைப்பற்றியும் பேசாமல் அன்றைய காலை நிகழ்வுகள் பற்றியோ, சற்றுமுன் பருகிய தேநீர் பற்றியோ மிகச் சாதாரணமாகச் செல்லும் சந்திப்பின் அந்த நிமிடங்கள்.

எல்லாத் திசைகளிலும் காற்றடித்தால், கடலில் எந்தப் பக்கம்தான் செல்லும் அந்தப் படகு. வெவ்வேறு படகில் பயணிக்கும் ஒரே மாதிரியான பயணிகள் தானே நாமெல்லாம். மீண்டும் வழியில் சந்திப்போம், அம்முறை அதிகம் அலையாடிடுவோம் எனச் சொல்லி மறுபிரிவிற்கு ஆரம்பமாகிவிடுகிறது சந்தித்த மனதுகள், இருபெரும் துகள்களாக மீண்டும்…

அக்குழந்தையின் அச்சிறு இரு கண்கள் எவ்வளவு தூரம் தான் கடலை அளந்திட முடியும்?, அந்தக் குழந்தை அங்கிருந்து பார்வையை பிடிங்கிக் கொண்டும், கவனங்களை அக்கரையில் விதைத்துக் கொண்டும் நகர்ந்து செல்கிறது தன் இயல்பு வாழ்க்கையின் இரயில் வண்டி பிடிக்க….

ஓடிப் பிடித்திடும் இடைவெளியில் அவன் முன்னே ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்வெனும் இரயில் வண்டி, அவனும் இரயிலுக்குத் துணையாக இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறான் தவழ ஆரம்பித்த ஆரம்பங்களிலிருந்து.

நா.முத்துக்குமார்

18 வயதிலிருந்து 25க்கு இடைப்பட்ட காலத்தில் படித்த, கேட்ட கவிதைகளும், பாடல்களும் தான் எஞ்சியிருக்கும் வயதுகளுக்கு ஆக்சிஜனாக நம்முள் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் என்பதை நான் உணர ஆரம்பித்த வயது இது. இதில் ஆகப்பெரும் கணக்குகள் இல்லையென்றாலும், முடிவில்லா தேடல் நம்மில் தொடங்கும் அந்த இருபத்திய வயதுகளின் இறுதி பருவங்களிலிருந்து நாம் கவனிக்காமல் நம்மில் இழப்பவைகள் அதிகம், அதன்படியே மேல் சொன்ன எழுதப்படாத விதி பெரும்பாலும் சரியென ஆகிறது.

 

பாடல்களைத் தாண்டி புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கையில் வயதின் பருவத்தில் ஒருபடி மேலே சென்று வளற ஆரம்பித்தது விடுகிறோம் நாம். சந்தோசமாச் சொல்வதென்றால் நா. முத்துக்குமார் புத்தகங்களாக எனக்கு அறிமுகமானது எனது 25வது வயதில், வருத்தமாகச் சொல்வதென்றால் நா.முத்துக்குமார் எனக்கு அறிமுகமானது அவர் காற்றில் கலந்த ஓராண்டிற்குப் பிறகு(2017).

நா.முத்துக்குமார் பற்றிய இந்தப் பதிவிறக்காக அவரை நினைத்துப் பார்ப்பதில் புதியது ஒன்றுமில்லை, இதுவரை ஒவ்வொரு நாளாக எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்ததை ஒருசேர எழுதிப் பார்க்கிறேன் அவ்வளவே! என்னோடு நான் கொள்ளும் தனிமைகளில், நா.முத்துக்குமார் எழுதிய புத்தகங்களோ, முத்துக்குமாரின் பேச்சுகளோ, முத்துக்குமார் பற்றிய பதிவுகளோ ஏதேனும் ஒன்று என் விருப்பத் தேர்வில் தனிமையின் துணையாக அவ்வப்போது வந்து அமர்ந்து கொள்ளும். ஆக வரிகளின் வழி நானறிந்த நா.முத்துக்குமார் ஓர் அழகிய வாழ்வியல் மற்றும் அன்பு நிறைந்த வாழ்க்கைமுறை.

நமக்கான ஓரிரு வரிகளைத் தேடித்தானே கணக்கில்லா ஆயிரக்கணக்கான வரிகளைப் படிக்கிறோம், அவ்வாறான நிறைய நல்ல வரிகளை எனக்களித்த நா. முத்துக்குமார் பற்றி.,

பயணத்தை பேரழகாக்கும் ஜன்னலோரம், அந்தப் பயணத்தில் வரம். உன் வரி கொண்டு, என் வழி எங்கும் எனக்கான சந்தோச ஜன்னல்களை திறந்து விட்டபடி, இன்றும் உன் வரிகளில் உயிர்கொண்டு உரையாடி உறவாடிக்கொண்டிருக்கிறீர் முத்துக்குமரா!

கவனிக்க மறந்த சின்னச்சின்ன சந்தோசங்களை கண்டுப்பிடித்துக் கொடுத்துச் சென்றவன் தானே நீ. மதங்களும், மனிதர்களும் மறந்து கொண்டிருக்கும் காதல்களை நினைவூட்டிச் சென்றிருக்கிறாய் முத்துக்குமரா!

தமிழ் மனங்கள் பரிமாறும் கனமான காதல் முத்தங்களில், உன் வரிகள் கொடுத்த காதலின் ஈரம் இதழோரம் lip-stick’என ஒட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியம் அதில் ஏதும் இல்லை.

இன்றைய கனமான காலக் கணங்களில், பரபரப்பான பகல் இரவு நேரங்களில் உன் வரிகளின் முற்றுப்புள்ளி என்னை ஆங்காங்கே நிறுத்திச் சென்று, நீ விட்டுச் சென்ற அணிலாடும் முன்றிலையும், நீ விற்ற பட்டாம்பூச்சிகளையும், நீ வேடிக்கை பார்ப்பவனாக இருந்ததையும் திரும்ப திரும்பிப் பார்க்க வைக்கிறது.

 

உன் புத்தகங்கள் வழியே நான் உனைக் கண்டுபிடிக்ககையில், பிடிக்க முடியாத தூரம் நீ சென்று விட்டாய். உன் வரிகளின் அர்த்தங்கள் புரியத் தொடங்கையில், அர்த்தமில்லா இடத்திற்கு சென்று விட்டாய் முத்துக்குமாரா. அதனால் என்ன ஆகிவிட்டது? உன் எழுத்துக்களின் வழி கொண்டு எல்லா காலையும் எங்களுடன் எழுந்து கொள்பவன் தானே நீ!

இன்றும் நான் அன்பளிப்போ, அடுத்த புத்தகத்திற்கான விருப்பத் தேர்வோ யாருக்கேனும் தருவதென்றாலும் முதலில் நினைவில் எட்டிப் பார்ப்பது உன் அணிலாடும் முன்றிலும், வேடிக்கை பார்ப்பவனும் தான். உன் வரிகளை பற்றிக்கொண்டு நகர்கிறது எங்கள் நாட்கள்.

உன் இழப்பைத் தவிர அத்தனையும் பிடித்திருக்கிறது உன்னிடம். இருந்தாலும் என்ன, இல்லாவிட்டாலும் என்ன இருப்பதையும், இருந்ததையும் கொண்டாடிடத் தானே வேண்டும். இன்றும் நீ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாய் எனவெண்ணி, உன் வீட்டு முன்றிலில் விளையாடும் அணில் தானே நாங்களெல்லாம்.

எதை நோக்கிச் செல்கிறோம் – பருவம் 2

நிகழ்கையில் சாரல்..
நினைக்க நினைக்கத்தான்
மழை.! – அறிவுமதி.

star

வடகிழக்கு மேல் வானத்தில், மூச்சு விடும் இடைவெளியில் இரு வால் பிடித்த வால்நட்சத்திரங்கள் ஓடியாடிக் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. எட்டுமுனைக் கண்கள் கொண்டு நடப்பதை எட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபடி இரவு நேர உணவிற்கு குழந்தை நட்சத்திரங்களை அழைத்த படி இருந்தது தாய் நிலா. நிலவே ஆனாலும் அதன் சொற்படி நிற்பதில்லை அதன் நட்சத்திர குழந்தைகள்.

அன்றைய இரவில் தீராதக் குறையொன்று இருப்பதாக கூறி உண்ணாவிரதம் இருந்தன நட்சத்திரங்கள். அழகாய் அவ்வப்போது கண் மூடித் திறந்து தனது கோபத்தை காட்டியது அக்குழந்தைகள். ஊரில் உள்ள அம்மாக்கள் எல்லோரும் நிலா கதை சொல்லி ஊட்டி விட்டுக் கொண்டிருக்க, தங்களின் நிலா அம்மாவோ கதையே சொல்வதில்லை என்ற வருத்தம் அக்குழந்தைகளுக்கு….

நிலவிற்க்கோ கதை சொல்லிப் பழக்கமில்லை என்றாலும், சமாதானப்படுத்த தான் பார்த்த ஒரு நிஜத்தைச் சொல்ல ஒப்புக் கொண்டது…

இதைப் போலவே செல்லமான சமாதானங்கள் கிடைக்குமெனில், பொய் கோபம் கொண்டதாய் நடிப்பதில் எத்தனை சுவாரஸ்யம் அந்த நட்சத்திரங்களுக்கு. இரவின் மடியில் நட்சத்திரங்களை கிடத்தி அன்றைய நாளுக்கான கதையை சொல்லத் தொடங்கியது பால்நிலா, தன் உதிரத்தின் உதிரியான நட்சத்திரங்களுக்கு…

அதன் தூரப்பார்வையில் உலகமே தெரிந்தாலும், அது உற்றுப் பார்த்து கை காட்டியது ஒரு பூந்தோட்ட பூச்செடியையும் அதன் பக்கத்து தோட்டத்தில் விளைந்திருந்த மற்றொரு செடியையும். தாய் நிலா அந்த இரு செடிகளையும் தன் நட்சத்திரக் கூட்டங்களுக்கு அவ்விரு செடிகளின் வளர்ந்த கதை சொல்ல ஆரம்பித்தது…

நிலா: ஒரு வேர் கொண்டு, இரு வேறு தோட்டத்தில், இரு வேறு செடிகள் இருக்கிறது., நாளும் நான் தேடிப் பார்க்கும் பூமியின் நட்சத்திரங்கள் இவையிரண்டும்.

நட்சத்திரம் 1: அதென்னம்மா ஒரு வேரில் இரு வேறு செடிகளா? தூர இருக்கும் இவ்விரு செடிகளுக்கு ஒரு தூரில் எப்படி?

நிலா: இதுநாள் வரை இங்கிருந்து பார்த்ததை சொல்கிறேன் கேளுங்கள்…

இந்த இரு செடிகளும் எங்கோ விதைகொண்டு வேர் பிரிந்து பிறந்திருந்தது. களையெடுத்து காப்பாற்றிய இந்த இரு வேறு செடிகளை ஒரு பருவத்தில் பண்ணையில் வைத்து ஒன்றாய் சேர்த்து வைத்து வளர்த்து வந்தார்கள் அந்தச் செடிக்கு சொந்தக்காரர்கள்.

அப்படித் தான் அந்த புதுப் பண்ணையில் இந்த இரு செடிகளும் முதல் முறை இலை தலை பார்த்துக் காற்றில் கை குலுக்கிக் கொள்ள ஆரம்பித்தது.

இப்படி இவை இரண்டும், நாட்கள் செல்லச் செல்ல நாளொரு இலை தலை கொண்டு வளர ஆரம்பித்தது. கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இவ்விரு செடிகளும் வெவ்வேறு தோட்டத்தில் தன் வேர் ஊன்றி உயிர் வளர்க்கத் தொடங்கியது…

அடித்து வந்த வெள்ளத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் கண் காணாத தூரத்தில் இவ்விரு செடிகளும் வளறத் தொடங்கியது. மனம் கலந்த அந்த மண்ணின் வழி அவ்விரு செடிகளும் வேர் விரித்து உயிர் வளர்த்தது.

காலம் அதன் கண்ணாமூச்சியை அவ்விரு செடிகளிடம் விளையாட ஆரம்பித்தது.

புயலும், வறட்சியும் அவ்விரு பூச்செடிகள் தாங்குமளவிற்கு வந்து சென்றபடி இருந்தன. நுனி வேரில் பழைய நினைவுகள் கொண்டிருந்த இந்த இரு செடிகளும் வேறுவழி ஏதும் இன்றி தன் வேர் வழியாகத் துணை வேர்களைத் தேடி அலைந்தது.

வருடங்களுக்கும், வறட்சிகளுக்கும் வார்த்தையில் மட்டுமே எளிதில் கடந்து போகும், இதுபோன்ற இன்னபிற இன்னல்களையும் கடந்து சென்று கொண்டிருந்தன இவ்விரு வேர்களும் தன் தொடக்கத்தின் தொடர்புகளைத் தேடி. பாறைகளைத் துளைத்த இவ்விரு செடிகளின் வேர்கள் பிறிதொரு காலத்தில் மண்ணுக்கடியில் உடையாமல் மனம் சந்தித்துக் கொண்டன.

இன்று இவ்விரு செடிகளைச் சுற்றியும் தத்தம் துணைச் செடிகள் அதன் மடிமீது ஓடியாடி விளையாடுகிறது., இருந்தும் வேரின் பிடித்தம் கொண்டு தூரத் துணைச் செடியின் உயிர் காண்கிறது இவ்விரு செடிகளும்… பூமியில் தூரத் தெரிகையில் தான் செடிகள் வெவ்வேறே தவிர, அதன் வேர்கள் பிணைந்தே இருக்கின்றன ஆழ் மனதில்…

கதை கேட்டபடியே நிலவும், நட்சத்திரங்களும் அன்றைய இரவின் உணவைக் கொண்டிருந்தன…

இதுவரை இக்கதை கேட்டுக் கொண்டிருந்த மேகங்கள் மனம் கரைந்து மழையென மண் தொட்டது, அச்செடிகளின் வேர் தொட்டுப் பார்த்திட… அந்த இரவில் வானம் உடைந்து விட்டதைப் போல அடைமழை பெய்து தீர்த்திருந்தது. அன்பின் வேர்கள் பூமியை உடையாமல் பிணைத்திருந்தது…

child

இவனின் இன்றைய இருபத்திய வயதுகளில் எண்ணிப் பார்க்கிறான் மழைத்துளியும், கண்ணீரும் மிகச்சிறந்த கவிதைகளென… இன்றிவன் நினைத்துப் பார்க்கையில் அடி மனதின் வெற்றிடத்தில் பட்டு எதிரொலிக்கிறது என்றோ வந்து சென்ற முகங்கள்…

தயக்கம் சிறிதுமின்றி ஒருமையில் இவனையும், இவன் அவர்களையும் கூப்பிட்டுக்கொள்வது பால்ய நண்பர்கள்களைத் தான். இவர்களுடன் தான் இவன் அண்ணாந்து ஆகாசம் பார்த்ததும், எப்போதாவது இவன் ஊர் வழி பறந்து செல்லும் ஏரோஃப்ளேன், ஹெலிகாப்டர் வேடிக்கை பார்த்ததும், நுங்கு வண்டியில் விளையாடிப் பார்த்ததும்…

வளர்ந்திட்ட இவன் வெட்டாத நுங்குகளையும், அதில் ஓட்டிடாத நுங்கு வண்டிகளையும் பனைமரத்தடியின் கீழ் நின்று பார்க்கையில் மீண்டும் சிறியவனாகித் தான் போகிறான்….

இனிமே நாம ப்ரண்டா இருப்போம் டா எனச் சொன்ன ஆறாம் வகுப்பு ராமர், அடுத்த வருடம் வேறு பள்ளியில் சேர்ந்ததில் தூரத்து நண்பனாகிப் போனான் இன்றுவரை பார்க்காமல். முதலில் தெரிவதில்லை பெரும்பாலான இறுதிகள்… இழப்பதற்கு தானே பெற்றுக் கொண்டு இருக்கிறோம்…

கிழமேற்கில் செல்லும் பத்து கிலோமீட்டர் சைக்கிள் பயணம் தான் இவனின் பள்ளிக்காலம், ஊருக்கு ஒருவராக இவனும், இவனின் பக்கத்து ஊர்க்கார நண்பனும் பள்ளி சென்ற பயணங்கள் அவை. நாட்கள் செல்லச் செல்ல இவர்கள் வரும் வழியில் இவர்களை வைத்து காலநேரம் பார்த்துக் கொண்டவர்கள் உண்டு, ஊருக்கருகில் காலையில் இவர்களைப் பார்த்தால் மணி எட்டு, மாலையில் இவர்களைப் பார்த்தால் அது மணி ஐந்து. தினமும் வீடு திரும்பும் மாலையில், இன்னைக்கு பள்ளிக் கூடத்துல என்ன சொல்லிக்கொடுத்தாங்க எனக் கேட்கும் ஆடு மேய்க்கும் தாத்தாக்களுக்கு அமீபாக்களையும், அல்ஜீப்ராக்களையும் அவர்கள் காதில் சுத்திச் சென்றதுண்டு…

இவன்தன் விதையிட்ட மண்ணை விட்டு, வேர் விரிக்க வேறு மண்ணைத் தேடிப் பொள்ளாச்சி, சென்னையென சென்றதில் அந்த ஊரின் மண்ணையெல்லாம் தன் வேரின் இடுக்கில் சிறுகச் சிறுக சேமித்து வைத்துக்கொண்டிருக்கிறான்…

நிகழ்காலப் பரபரப்புகளில் சிக்கித் தப்பித்து விளையாடும் இவனுக்கு பழைய நண்பர்களின் பெயர்கள் கொண்ட புதியவர் யாரையேனும் சந்திக்கும் பொழுது, அந்தச் சிறுநெடு நொடியில் பழகிய பழைய நினைவுகளை மீட்டுத் தருகிறது அவர்களின் பெயர்கள்.

உருவங்களுக்காக பெயர்கள் என இல்லாமல், சில பெயர்கள் தனக்கென உயிர்கொண்டிருப்பதாக இவன் அடிக்கடி உணர்வான். இவன் எப்போதோ கூப்பிட்டுப் பார்த்த பெயர்கள் இப்போது நினைவுக்கு வருகையில் இவனையும் அறியாமல் இவனின் இதழோரம் புன்னகை புரியும், அந்தப் பெயர்களின் முகங்களுக்காக….

பருவம் வளரும்…

எதை நோக்கிச் செல்கிறோம் நாம் – பருவம் 1

பட்டுப்பூச்சியின் பரிமாணங்களே மனித வாழ்க்கை, ஒவ்வொரு பருவத்திலும் முதிர்ந்து, உடைந்து  பட்டாம்பூச்சிகளாக வண்ணம் நிரப்பிக் கொள்கிறோம்… நமக்குப் பிடிக்கும் எல்லா பிடித்தங்களிடமும் சந்தோச வண்ணம் விட்டுச் செல்லும் பட்டாம்பூச்சிகள் தானே நாமெல்லாம்…

 

எல்லோரையும் போல இவனுமிங்கே ஓர் பட்டாம்பூச்சியாக …

 

அம்மாவின் சுமை குறைக்க மடியிலிருந்து நழுவி வெளி வந்தான், பெற்றெடுத்ததும் எந்த அம்மாக்களுக்கும் தங்கள் சுமைகளை குறைத்துக் கொள்வதில்லை என. மடியிலோ மனதிலோ எப்போதும் சுமந்து கொண்டுதான் இருந்து கொண்டு விடுகிறார்கள். உருவமில்லா பருவத்தில் அவனுக்கந்த அந்த பேருண்மை அப்போது  புரியவில்லை…

 

குழந்தைகள் பிறக்கின்றபோது அவர்களுக்கான வானமும் அவர்கள் கூடே சேர்ந்து இரட்டைப் பிறவியாகப் பிறக்கிறது, ஆனால் அவ்வானம் அவர்கள் காலடியிலேயே கிடக்கிறது. அதனாலே அவர்கள் நகர்ந்து தவழும் பருவங்களில் கீழ் வானத்து நட்சத்திரம் பிடித்து விளையாடுகிறார்கள்.,

 

குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான வானமும் நட்சத்திரம், நிலா நிரப்பிக் கொண்டு தூர உயரமாக வளர்ந்து விடுகிறது.., அப்படியாகவே வளர்ந்து விட்ட எல்லோரையும் போல இவனும் அன்று தரையில் தொலைத்த  நட்சத்திரத்திரங்களை இன்றைய இரவுகளில் அண்ணாந்து பார்த்துத் தேடி வருகிறான்…

 

இவன் குழந்தைப் பருவத்தின் மீதமிருக்கும் மிச்சம் இவன்  செய்த குறும்புகளும், அதைச் சொல்லும் பாட்டிமார்களும் தான்.

 

இப்படியாக முழுப் பட்டாம்பூச்சியாக வளர்ந்திட்ட இவன் இந்த முறை ஊர் திருவிழாவிற்கு இவன் சென்றிருந்தான், இவனைப் பெற்ற அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த பாட்டி இவனைப் பற்றி அவரிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்க,  

 

உங்க பேரன் பக்கத்துல தான் நிக்கிறான், பாருங்க எப்படி வளந்துட்டான்’னு அவனின் அம்மா சொன்னதும் கொஞ்சம் தடுமாறி திசை திரும்பி இவன் முகத்தைத் தன் விரல்களால் வருடி என் பேரன் நல்லா இருந்தா போதுமென ஏதோ சொல்லிக் கொண்டு இருக்க,

அந்தப் பேரனுக்கோ ஆழ்மனதில் பதிந்திருந்த அந்தப்  பாட்டியின் கைரேகை இப்போது பட்டதில் திறந்து கொண்டது அவனின் பால்யத்தின் பயணக் கதவுகள்….

 

அந்தப் பேரனுக்கு அந்தப் பாட்டியின் கைரேகை புதியது ஒன்றும் இல்லை, இவன் பிறந்த தருணங்களில் இவனைத் தாங்கிய கைகளில் ஒன்றாகவே அது இருந்தது , அன்று அவன் மனதில் பதிந்த அந்தப் பாட்டியின் கைரேகையை இன்று அவன் மறுபடியும் புதுப்பித்துக் கொண்டான்.

 

இத்தனைக்கும் அந்தப் பாட்டி இவனுக்கு அம்மா வழிவந்த, அப்பா வழிவந்த பாட்டியோ இல்லை, ஆனாலும் இவனுக்கு நினைவு தெரியாத நாட்கள் முதற்கொண்டு பாட்டியாகவே இருந்து வருகிறார். அம்மா வழியில் பாட்டியா, அப்பா வழியில் பாட்டியா எனச் சொல்வதை விட பாட்டிகள் வழியே அம்மாக்களும் அப்பாக்களும் அறிமுகமாகிறார்கள்.  பாட்டிகளும், தாத்தாக்களும் வயதாகும் நாட்களில் மறுபடியும் குழந்தைகளாக மாறுகிறார்கள்.

 

பருவத்தின் படிக்கட்டுகளின் ஒவ்வொரு படிகளையும் ஏறி நின்று பார்க்கையில் கடைசிப் படியில் நாம் தேடிச் செல்லும் பொருள், உருவம், திசை இதில் ஏதாவதொன்று தெரியும்…, பிடித்தலுக்கும் புரிதலுக்குமான இடைவெளியே அந்த ஒவ்வொரு படிகளின் தூரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

பால்யத்தின் கடைசிப் படியில் ஏறிநின்ற இவன் பார்த்தது இவன் தோட்டத்து நாய் குட்டி, அவன் பார்த்த படங்களிலிருந்த ஓரிரு சூப்பர் ஹீரோ பெயர்களில் இருந்து ஒரு பெயரை எடுத்து அவன் தோட்டத்து நாய்க்கு சூட்டினான், அது எல்லா நாய்கள் போல அறியாமையான நாய் அல்ல, அது கொஞ்சம் பள்ளிகூடம் சென்று படித்த நாய். இவன் கூடவே பள்ளி சென்று, பள்ளி மூடும் நேரங்களில் அவனுடன் கூடும் நாய்.

 

ஏனோ அந்த நாய்க்கு மட்டும் பள்ளிக்கூடம் செல்ல இவனை விட அதிகம் பிடித்திருந்தது. இவன் உள்ளூர் பள்ளியில் படித்து தீர்ந்தது போக வெளியூர் பள்ளியில் ஆறாவது படிக்கப் பஸ் ஏறுகையில் இவனுடன் சேர்ந்து அந்த நாயும் பஸ் படிகளில் ஏறிய நியாபகம் இவனுக்கு உண்டு…

 

மனிதன் வந்தது குரங்குகளில் இருந்தா இல்லை நாய்களில் இருந்தா என்றவொரு சந்தேகம் இவனுக்கு அப்போது வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை… அடைமழை இடி, தீபாவளி வெடியென அந்த நாய் நினைப்பில் இவன் தொலைத்த தூக்கங்கள் ஏராளம்…

 

இப்படிச் சென்ற இவன் நாட்களில், பிரேக் போடாமல் சென்று இவன் பால்யாத்தை நிறுத்தி வைத்தவர் பெயர் தெரியாத டெம்போ டிரைவர், எல்லோரும் நாய்களைப் போல கவனமாகவா ரோட்டில் கடக்கிறார்கள்???? எங்கோ சென்ற அந்த டெம்போ டிரைவர் என் பால்யத்தின் மீதேறிச் சென்றார், அதன் பிறகு அந்த நாயும் திரும்பவில்லை, அதனூடே என் பால்யமும்…

இன்றும் தோட்டத்தில் புதிதாக ஒரு நாய் இருக்கிறது, அது அவனது அக்கா மகளின் பால்யத்திற்க்காக…

 

dog.jpg

 

இவன் பள்ளிப் பருவத்தின் படிகட்டுகளில் ஏறிப்பார்க்கையில் கடைசிப் படியில் தெரிந்தது பனி சூழ் பகலில் தெளிவாய் தெரியாத பள்ளிக்கூட முகங்கள் ,

 

இவனின் பெரும்பாலான பள்ளிக் காலங்கள் சைக்கிள் பயணங்களிலேயே கடந்தது உண்டு, இன்னும் கூட அந்த சைக்கிள் பயணங்களின் மிச்சப் பயணத்தைத் தான் இவன் இப்போது தொடர்வதாக இவனுக்குள் ஓருணர்வு பயணிப்பதுண்டு .

 

பள்ளிக்கூடம் என்றதும் கூடவே இவனுக்கு நினைவில் வருவது தமிழ் ஆசிரியர்கள், தமிழ் சொல்லித் தருவதாலோ என்னவோ தமிழ் ஆசிரியர்கள் மட்டும் இதயத்தினருகிலேயே இருந்து விடுகிறார்கள்.

 

பதினொன்றாம் வகுப்பில் maths க்ரூப் படிக்க ரொம்பவும் கடினமென யாரோ ஒரு accounts க்ரூப் பையன் சொல்ல, அதிலிருந்து பிடிக்காமல் போனது maths க்ரூப்பும், maths குரூப்  சார்ந்த மற்ற சப்ஜெக்ட்களும்.

 

இவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்க்காக காத்திருந்த தினங்களில் பதினொன்றாம் வகுப்பின் அக்கவுன்ட்ஸ் க்ரூப் புத்தகத்தை பக்கத்து ஊர் பையனிடம் வாங்கி படிக்க ஆரம்பித்து விட்டான்.

 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சந்தோசப்படும் அளவிற்கு அதிகமாகவோ, இல்லை வருத்தப்படும் அளவிற்கு குறைவாகவோ மார்க் வாங்காமல் நடுத்தரமான மதிப்பெண்கள்  வாங்கியிருந்தான்.

 

பதினொன்றாம் வகுப்பில் accounts க்ரூப்பில் சேர அட்மிசன் போடும் அறையில் முன் சொன்ன தமிழ் வாத்தியார் நின்று கொண்டு இருக்க. இவனுக்கோ மனதுக்குள் மலையளவு மகிழ்ச்சி, accounts க்ரூப்பில் சேர்வதற்க்கு இவன் பள்ளியில் நிர்ணயித்திருக்கும் குறிப்பிட்ட மதிப்பெண்ணைவிட இவன் அதிகமாக வாங்கி விட்டதாலும், முதல் நாளே அட்மிசன் போட வந்து விட்டதும் இவன் சந்தோசமாக இருக்கப் போதுமான காரணங்கள்.

 

இவனின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த தமிழ் வாத்தியார் இவனைக் கேக்காமலே maths க்ரூப்பில் அட்மிசன் போட்டு பெயர் எழுத ஆரம்பித்து விட இதுவரை தமிழ் ஹீரோவாக இருந்த தமிழ் ஆசிரியர் திடீரென ஆங்கில வில்லனாக மாறிப்போனார்…

 

Accounts க்ரூப்பில் சேர்வதற்கான இவனின் போராட்டம் அவரிடம் தோற்றுப் போக, அந்தப் பள்ளியில் அந்தத் தமிழாசிரியர்க்கு இருந்த செல்வாக்கை மீறி ஏதும் செய்திட முடியாது எனத் தெரிந்து அவனின் அப்பாவுடன்  வேறு பள்ளிக்கு அட்மிசன் போடச் சென்றான்… Accounts க்ரூப் தேடி அலைந்த தருணங்கள் அவை. இவன் ஊரைச் சுற்றியுள்ள மூன்று பள்ளிகளிலும் இவன் மறந்துவிட்ட வேறுசில காரணங்களால் accounts க்ரூப்பில் அட்மிசன் கிடைக்காமல் போனதாலும் வேறுவழி இன்றி பழைய பள்ளிக் கூடத்திலேயே சேர்ந்திடச் சென்றான்,

 

அந்த வயதுகள் எல்லாம் இவன் கடவுளை நம்பிய தினங்கள். இவனும், இவன் வீட்டின் அருகில் இருந்த பெரும்பாலானோரின் அன்றைய வேண்டுதல் இவனுக்கு accounts க்ரூப்பில் அட்மிசன் என வேண்டியே இருந்தது, இவன் வீடு இருந்த தெருவில் இவன் தான் கடைசிச் சின்னப் பையன் என்பதால் கிடைத்த அதிகப்படியான வேண்டுதல் அது.

 

எத்தனை பேர் வேண்டினாலும் என் தமிழ் ஆசிரியரின் மனதை மாற்ற எந்தக் கடவுளும் இல்லை, தமிழாசிரியரின் ஆசிப்படியே maths க்ரூப்பில் வேண்டா வெறுப்பாகச் சேர்ந்தான்… ஒருவேளை இவனுக்கு அன்று accounts க்ரூப்பில் அட்மிசன் கிடைத்திருந்தால் கடவுள் இருந்திருப்பார் என்று நம்பியிருப்பானோ என்னவோ!

 

இன்று இவனுக்கு நம்பிடக் கடவுள்கள் என ஒன்று இல்லையென இருப்பதற்கு, இவன் பள்ளியில் பாடமெடுத்த மூன்று மும்மூர்த்திகள் தான் முதற்கண் காரணம். இவனறிந்த வரையில் கடவுள் மறுப்பை தைரியமாக அறிமுகப் படுத்தியவர்கள் எட்டாம் வகுப்பில் தமிழ் பாடமும், ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலமும், பத்தாம் வகுப்பில் கணிதமும் சொல்லித்தந்த மும்மூர்த்திகள் அவர்கள். இன்று இவன் பெரியாரைப் படிக்கையில் பெரியாரின் வரி வழியே சந்திப் புள்ளிகளில் என் மூன்று வாத்தியார்களும் என்னுடன் சந்தித்துக் கொள்கிறார்கள்…

 

கணிதத்தோடு ஒட்டி வந்த கணினியை ஒட்டி இவன் மென்பொருள் மேல் செல்வான் என இவனும், ஏன் அந்தக் கணினியும் கூட கனவிலும் நினைத்திருக்காது. ஒருவேளை அந்தத் தமிழாசிரியர் நினைத்திருக்கலாம் என இப்போது அவன் நினைத்துக் கொள்வதுண்டு…

 

இன்றும் தமிழாசிரியர் என்ற யாரையாவது பார்த்திடும் போது இவனின் தமிழாசிரியர் தான் இவன் கண் முன் நின்று செல்கிறார்…

 

வளரும்….